தாயன்பே மேலானது
ஒருமுறை நாயகத்தைக் காண வந்த நண்பர் ஒருவர், தன்னிடமிருந்த போர்வையை விரித்துக் காட்டினார். அதில் ஒரு தாய்ப்புறாவும், இரு குஞ்சுகளும் இருந்தன. குஞ்சுகளைப் பாதுகாக்க தாய்ப்புறா இறகுகளை விரித்தபடி இருந்தது.
”நாயகமே! நான் உங்களைக் காண வரும் வழியில், புதர் ஒன்றில் பறவைகளின் ஒலி கேட்டது. அதற்குள் இரு புறாக்குஞ்சுகள் இருப்பதைக் கண்டேன். பார்ப்பதற்கு அழகாக இருந்த அவற்றை பிடித்து என் போர்வைக்குள் சுருட்டிக் கொண்டேன். அப்போது அங்கு வந்த தாய்ப்புறா துடிதுடித்தது. உடனே போர்வையை விரித்துக் காட்டவே, அதுவும் போர்வைக்குள் வந்து அமர்ந்தது. தன் சிறகை விரித்து குஞ்சுகளை அரவணைத்தது. அவற்றை உங்களுக்காக இங்கு கொண்டு வந்தேன்” என்றார் நண்பர்.
இதைக் கேட்ட நாயகம் கண் கலங்கினார். ” ஏன் இப்படி செய்தீர்கள்? குஞ்சுகளுக்கு நேர்ந்த ஆபத்து தனக்கும் சேர்ந்து வரட்டும் என தாய்ப்புறா நினைத்துள்ளது. அதனால் தான் வலிய வந்து உங்களிடம் சிக்கிக் கொண்டது. எல்லா உயிர்கள் மீதும் அன்பு காட்டுங்கள். தாயன்பு தான் உலகில் மேலானது. நீங்கள் எந்த இடத்தில் புறாக்களை எடுத்தீர்களோ, அங்கேயே விட்டு விடுங்கள்” என்றார்.