திருப்பூர் சிவகாமியம்மனுடன் நடராஜர் திருவீதியுலா
திருப்பூர் : ஸ்ரீநடராஜபெருமான், பச்சைப்பட்டு உடுத்திய சிவகாமியம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பூரில், வைகாசி விசாகத்தேர்த்திருவிழா நடந்து கொண்டிருக்கும் நிலையில், நேற்று (மே., 22ல்) மகாதரிசன வழிபாடு நடந்தது.திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில்,
ஸ்ரீநடராஜர் மற்றும் சிவகாமியம்மன் உற்சவர்களுக்கு, 16 வகை திரவியங்களால் அபிஷேகமும், தொடர்ந்து, அலங்கார பூஜையும் நடந்தது.நடராஜ பெருமான், வெள்ளி கவசம் அணிந்து, ரத்தினக்கல் பதித்த பதங்களை மார்பில் அணிந்தும், ருத்ராட்ச மாலை மற்றும் மலர் வகைகள் அணிந்தும் அருள்பாலித்தார்.சிவகாமியம்மன், பச்சை பட்டு உடுத்தி, மரகத்தக்கல் பதித்த வெள்ளி கிரீடம் தரித்து, ரத்தினக்கல் மற்றும் வெள்ளை கல்பதித்த பதங்களை அணிந்தும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளிய ஸ்ரீநடராஜர், சிவகாமியம்மன், கோவில் எதிரே உள்ள பட்டி விநாயகரை மூன்று முறை சுற்றி வந்தனர். தொடர்ந்து, திருவீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.