உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லாத்தா! கோவிலை அகற்ற அறநிலையத்துறை மறுப்பு

செல்லாத்தா! கோவிலை அகற்ற அறநிலையத்துறை மறுப்பு

கிராம தேவதை கோவிலை அகற்ற, ஹிந்து அறநிலையத் துறை மறுப்பு தெரிவித்து வருவதால், சென்னை - தடா ஆறு வழிச்சாலை திட்டம் நிறைவேறுவதில், இடையூறு ஏற்பட்டுள்ளது.

சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக, சென்னை - தடா இடையிலான, 54 கி.மீ., சாலை உள்ளது. இச்சாலையை, 330 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆறுவழியாக விரிவாக்கம் செய்வதற்கு, 2009ல் அடிக்கல் நாட்டப்பட்டது.இதற்கான பணிகள், தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன. பணிகளை பாதியில் நிறுத்தி, தனியார் நிறுவனம் ஓட்டம் பிடித்தது. ஏழு ஆண்டுகளுக்கு மேலாக, பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதனால் விபத்துகள், உயிர் இழப்புகள் அதிகரித்து வந்தன.

கடிதம் முதல்வர், இ.பி.எஸ்., திருப்பதிக்கு சென்றபோது, இச்சாலையின் நிலையை கவனித்தார். அடுத்த சில நாட்களில், இது குறித்து, அப்போதைய, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர், நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதினார்.பிரதமரிடமும், திட்ட பணிகளை மீண்டும் துவங்குவதற்கு, தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.பாரத்மாலா திட்டத்தில், இப்பணியை மேற்கொள்வதற்கு, மத்திய அரசு முடிவெடுத்து, 2018 ஜனவரியில், 296 கோடி ரூபாய் ஒதுக்கியது.இந்த நிதியை பயன்படுத்தி, தடா முதல், நல்லூர் சுங்கச்சாவடி வரை, 33 கி.மீ., சாலையை விரிவாக்கம் செய்ய, முடிவு செய்யப்பட்டது.

பணியை மேற்கொள்வதற்கு, எஸ்.பி.எல்., என்ற தனியார் நிறுவனத்தை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தேர்வு செய்தது. இந்நிறுவனம் வாயிலாக, சாலை விரிவாக்க பணிகள், மார்ச் 28ல் துவங்கப்பட்டன. சாலை பணிகளை, 2020 மார்ச், 27ல் முடிக்க, இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டது. விளக்கம் தற்போது வரை, 18 கி.மீ.,க்கு, 55 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. பணிகளை முடிப்பதற்கு குறைந்த கால அவகாசமே உள்ளது. வடகிழக்கு பருவமழை, அக்டோபரில் துவங்குவதற்கு முன், சில பணிகளை முடிக்க வேண்டியுள்ளது.

இந்த சாலையில், அழிஞ்சிவாக்கம் அடுத்த ஜெகனாதபுரத்தில், ஹிந்து அறநிலையத்திற்கு சொந்தமான, செல்லாத்தம்மன் கோவில் உள்ளது. அரசு புறம்போக்கு நிலத்தில், இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.இந்த கோவில் அமைந்துள்ள பகுதியில், ஆறு வழிச்சாலை அமைக்க, இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கோவிலை அகற்றுவதற்கு, அறநிலையத்துறை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இது தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில், அறநிலையத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டு இருந்தது.

அதற்கு, ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் தரப்பில் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: சுற்றுப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக, இந்த கிராம தேவதை கோவில் உள்ளது. இக்கோவிலில், தல விருட்சமாக, 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வேப்ப மரம் உள்ளது. கோவிலை மாற்றி அமைக்க, வேறு இடம் இல்லை.கோவிலை அகற்றக் கூடாது என, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம், மக்கள் முறையிட்டுள்ளனர். எனவே, கோவிலை அகற்றாமல், மாற்றுப் பாதையில், சாலை பணியை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனால், கோவில் அமைந்துள்ள பகுதியில், சாலை பணியை முடிப்பதில், இழுபறி நீடிக்கிறது.

கோவிலை மாற்றிக்கட்டுவதற்கு, தேவையான இழப்பீடு வழங்குவதற்கும், தேசிய நெடுஞ் சாலை ஆணையம் முன்வந்துள்ளது. ஆனாலும், அறநிலையத்துறை, அதற்கு அனுமதி வழங்கவில்லை.எனவே, இப்பிரச்னையை, முதல்வர், இ.பி.எஸ., கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு, ஆணையம் முடிவெடுத்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !