உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றுக்கு செல்லும் விழா

கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றுக்கு செல்லும் விழா

கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழாவையொட்டி, நேற்று (மே., 29ல்) மாலை, கம்பம் ஆற்றுக்கு செல்லும் விழா கோலாகலமாக நடந்தது. கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 12ல் துவங்கியது.

தொடர்ந்து பூச்சொரிதல், காப்பு கட்டுதல், மஹா சண்டியாகம், மறுகாப்பு கட்டுதல், தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகள் விமரிசையாக நடந்தன. நேற்று முன்தினம் (மே., 28ல்), பொங்கல் வைத்தல், மா விளக்கு, தீச்சட்டி ஊர்வலம் நடந்தது.

கம்பம் ஆற்றுக்கு செல்லும் விழாவையொட்டி, நேற்று (மே., 29ல்) மாலை, 4:30 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு பூஜை துவங்கியது. அதன் பின், கோவிலில் இருந்து மேளதாளத்துடன், அமராவதி ஆற்றுக்கு நகரின் முக்கிய வீதிகள் வழியாக கம்பம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதையொட்டி, வழி முழுவதும், 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஊர்வலத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்.பி., தம்பிதுரை, எம்.பி., ஜோதிமணி, எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி, கலெக்டர் அன்பழகன், எஸ்.பி., விக்கிரமன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கோவிலில் வரும், 6ல், பஞ்ச பிரகாரம், 7ல் புஷ்ப பல்லக்கு, 8ல் ஊஞ்சல் உற்சவம், 9ல் அம்மன் குடி புகுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !