இந்திர விமானம்!
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும் மதுரையில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அதற்கான காரணத்தை பரஞ்சோதி முனிவரின், "திருவிளையாடல் புராணம் விரிவாகச் சொல்லியிருக்கிறது.
பிறப்பால் அந்தணர்களான விருத்திராசுரன், விஸ்வரூபம் என்னும் இருவரை தேவேந்திரன் கொல்ல, அவனை பிரும்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. தோஷம் நீங்க குரு பகவானிடம் வழி கேட்டான் இந்திரன். அதற்கு அவர், ""நீ பூலோகம் சென்று பல்வேறு கோயில்களில் வழிபட, ஓரிடத்தில் உனது பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்றார்.
அதன்படி, இந்திரன் காசி முதலான பல்வேறு தலங்களில் வழிபட்டு, தெற்கு நோக்கிச் சென்றான். மதுரையில் ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்ற போது தன்னைப் பற்றியிருந்த தோஷம் நீங்கியதுபோல் உணர்ந்தான். அப்போது அவன் எதிரில் கடம்ப மரத்தடியில் பேரொளிப்பிழம்பாக சிவபெருமான் காட்சி தந்தார். ஈசனை தொழுத இந்திரன், அங்கே மகேஸ்வரனுக்கு ஒரு கோயில் கட்ட நினைத்து, உடனே வரும்படி தேவதச்சனுக்கு கட்டளையிட்டான். மதுரையம்பதி கோயிலில் சோமசுந்தரருக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு, "இந்திர விமானம் என்று பெயர்.
கோயில் எடுத்த இந்திரனுக்கு, கடம்பவனேஸ்வரராகக் காட்சி தந்த சுந்தரேசர், ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி நாளில் தன்னை வந்து வழிபடும்படி கட்டளையிட்டார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் இந்திரன் இந்நாளில் மதுரை தலம் வந்து ஈசனை வழிபடுகிறான் என்கிறது திருவிளையாடல் புராணம். அதனால்தான் மற்ற தலங்களைக் காட்டிலும் மதுரையில் சித்ரா பவுர்ணமி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.