காசியில் ஒரு கேதாரீஸ்வரர்!
காசி என்றும் பெனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசி இந்தியாவில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நகரமாகும். கங்கைக் கரையில் அமைந்த இந்நகர், இந்து சமயத்தினரின். ஆன்மீகத் தலைநகரமாகவும், அனைத்து இந்துக் கலைகளின் காப்பகமாகவும் விளங்குகிறது. முக்தி தரும் ஏழு நகரங்களில் வாரணாசியும் ஒன்று.
வேத, ஆகம, புராண, இதிகாசங்கள் யாவற்றிலும் போற்றித் துதிக்கப் பெறுவதும், புண்ணிய பாரத பூமியின் உத்திரப்பிரதேசத்தில் விளங்குவதுமாகிய காசி நகரத்தை ஓங்காரம், விஸ்வநாதம், கேதாரம் என்னும் முப்பிரிவுகளை உடையதாக கேதார மகாத்மியம் கூறுகிறது.
அவற்றுள் தெற்குப் பகுதியாகிய கேதாரத்துள் குமரகுருபர ஸ்வாமிகள், குமாரசாமி மடம் அமைத்து அருளாட்சி புரிந்த காலத்தில் கேதாரீஸ்வரர் திருக்கோயிலை கற்றளியாகச் செய்திருளினார். 67 முறை கேதார யாத்திரை செய்த வசிஷ்டர் காசியில் எழுந்தருளியிருக்கும் கேதாரீஸ்வரரை வணங்குவது ஏழு மடங்கு பயன் தரும் எனக் கூறியுள்ளார்.
பாசுபதனாகிய பரமேஸ்வரனுடைய அருளைப் பெற்ற வசிட்டமுனி என்ற பரம சிவயோகி இமயமலையிலுள்ள கேதாரநாதர் கோயிலில் கேதாரருடைய 16 கலைகளில் ஒன்றை மட்டும் அங்கு நிறுத்தி 15 கலைகளை காசியில் கேதாரீஸ்வரர் கோயிலுக்குக் கொண்டு வந்து கேதாரநாதரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார் என்பது கேதரநாதர் மகாத்மியம் கூறும் செய்தி.
கோயில் தோற்றம்: குமரகுருபரர் எடுப்பித்த கோயில் கேதார்க்காட்டில் இருந்தமையால் மிகப்பழமையானது. மாற்று மதத்தவரால் இடிக்கப் பெற்று மண்மூடி வழிபாடற்றுக் கிடந்தது. குமரகுருபர் விருப்பப்படி
கேதாரநாதர் கோயிலைப் புதுப்பித்துக் கொள்ள அப்போதிருந்த மன்னன் இசைவும் பொருளும் தந்தான்.
தென்னாட்டில் வழங்கும் ஆகம சிற்ப சாஸ்திர முறைகளின்படி வடக்கே கோயில் கட்ட எண்ணினார். குமரகுருபரர். தென்னாட்டில் இருந்து சிற்பிகளையும், ஆகம விற்பன்னர்களையும், அழைத்து வர தானே காசியிலிருந்து தருமபுரம் வந்தார்.
கவுரியம்பிகை உடனாய கேதாரீஸ்வரர் கோயிலுக்கு திருப்பனந்தாள் காசிமடம் 21-ஆவது அதிபர் கயிலை மாமுனிவர் காசிவாசி முத்துக் குமாரசாமித் தம்பிரான் அருளாணைப்படி சென்ற ஆண்டு, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.