உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதல் தாம்பூலம் யாருக்கு?

முதல் தாம்பூலம் யாருக்கு?

ஒரு சமயம் மாமுனிவர்கள், மகரிஷிகள், வேத வித்தகர்கள் மற்றும் செந்தமிழ்ப் புலவர்கள் ஆகிய எல்லோரும் ஒன்று கூடி பிரமாண்டமாக ஞானவேள்வி நடத்தினர்.

யாகம் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. கூடியுள்ள கூட்டத்தில்
இருக்கும் தலைசிறந்த ஒருவருக்கு "முதல் தாம்பூலம் கொடுக்க
வேண்டிய கட்டம் வந்தது. யாகம் நடத்திய வேத வித்தகர்கள், கூடியிருக்கும் கூட்டத்தினரில் மிகச்சிறந்தவர் யார் என்று ஆராய்ந்தனர். ஓரிடத்தில் ஒளவைப் பிராட்டியார் அடக்கமே உருவாக அமர்ந்திருப்பதைக் கண்டு "முதல் தாம்பூலத்தைப் பெற அவரே தகுதியானவர் என்று தீர்மானித்து அவரிடம் தாம்பூலம் அளிக்க
வந்தனர்.

""பெரியோர்களே! வேத வித்தகர்களான உங்களுக்கும் புலவர் பெருமக்களுக்கும் முனிவர்களுக்கும் அதிபதியாக இருக்கும் தேவேந்திரன்தான் முதல் தாம்பூலம் பெறத்தகுதியானவன். அவனுக்குக் கொடுங்கள்! என்று கூறி ஒளவைப் பிராட்டியார் மறுத்து விட்டார்.

தேவேந்திரனிடம் சென்றார்கள். அவரும் அதை மறுத்து, அகத்திய மாமுனிவர் அமர்ந்திருக்கும் திசை நோக்கிக் கைகாட்டி விட்டார். அகத்திய மாமுனிவரோ, ""அன்னை சரஸ்வதியே முதல் தாம்பூலம் பெறத் தகுதியானவள் என்று அடக்கத்துடன் கூறிவிட்டார். சரஸ்வதி தேவியும் அதை வாங்காமல், ""அனைத்து உயிர்களுக்கும் அன்னையாய்த் திகழும் உமா மகேஸ்வரியே முதல் தாம்பூலம் பெறத்
தகுதியானவள் என்று கூறி மறுத்து விட்டாள்.

"ஆகா -இதென்ன திருவிளையாடல் என வியந்தபடியே வேத வித்தகர்கள் . அன்னை பார்வதியிடம் சென்று நடந்தவற்றைக் கூறி, முதல் தாம்பூலத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டினர்.

அருட்பார்வையோடு புன்னகை புரிந்த அகிலாண்டேஸ்வரி, ""அன்பர்களே, முத்தமிழின் முதற்கடவுள், தமிழுக்குத் தலைவன், அனைத்துக்கும் மேலாக அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகனான கயிலைநாதனுக்கே ஞான உபதேசம் செய்து ஞான குருவாக, சுவாமிநாதனாக, தகப்பன்சாமியாக, சுப்ரமணியனாக விளங்கும்.

திருமுருகப்பெருமான்தான் இந்தத் தாம்பூலத்தைப் பெறத் தகுதியானவன். பொருத்தமானவன். அவனுக்குக் கொண்டு போய்க் கொடுத்து உங்கள் யாகத்தை நிறைவு செய்யுங்கள்! எனக் கூறி அருளினாள். அனைவரும் முருகனிடம் சென்று நடந்தவற்றையெல்லாம் பணிவுடன் தெரிவித்தனர். முருகப்பெருமான் அகமும் முகமும் மலர, அவர்கள் கொடுத்த முதல் தாம்பூலத்தை இரு கரமும் நீட்டி மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார். மனநிறைவு பெற்ற வேதவித்தகர்கள் மூவரும் முனிவரும், தேவரும் மற்றுமுள்ள உயிர்களும் போற்றும் குமாரக் கடவுளான திருமுருகப் பெருமானே சகலகலாவல்லவன் என்பதை அறிந்து தெளிந்ததோடு அனைவர்க்கும் உணர்த்தினார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !