திருவொற்றியூர், தேவி கருமாரியம்மன் கோவிலில், 300 பேர் பால்குடம் எடுத்து வழிபாடு
திருவொற்றியூர்:திருவொற்றியூர், தேவி கருமாரியம்மன் கோவில், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள், பால்குடம் எடுத்து வழிபட்டனர்.
திருவொற்றியூர் மேற்கு, அண்ணாமலை நகரில், பழமை வாய்ந்த ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், 35 லட்சம்ரூபாய் மதிப்பில், புனரமைக்கப்பட்டு, ஏப்ரலில்
கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, 48 நாட்கள், மண்டல பூஜை நடைபெற்றது.
கும்பாபிஷேக மண்ட லாபிஷேகம் பூர்த்தி விழாவை முன்னிட்டு, மஹா சண்டி ஹோமம், நேற்று (ஜூன்., 9ல்) காலை நடைபெற்றது. பின், தேரடி வடக்கு மாடவீதியில் உள்ள, அமர்ந்த
அம்மன் கோவிலில் இருந்து, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள், பால்குடம் சுமந்த படி, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.ஊர்வலமானது, கிராமத்தெரு, அண்ணாமலை கேட், 4 வது தெரு வழியாக, கோவிலை வந்தடைந்தது. பக்தர்கள் சுமந்து வந்த பால்குடங்கள் சேகரிக்கப்பட்டு, கருவறையில் வீற்றிருக்கும் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது.
அப்போது, பக்தர்கள் சிலர், பக்தி பரவசத்தில் மருளாடினர். பின், அம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில், சுற்றுவட்டார த்தை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.