குப்பைக்கு போன தங்கம்!
ADDED :5066 days ago
அப்பர் (திருநாவுக்கரசர்) சுவாமிகளின் முக்தி தலம் நன்னிலம் அருகிலுள்ள திருப்புகலூர். இங்குள்ள இறைவன் அக்னீஸ்வரர். அம்பிகை குழலியம்மை என்று அழைக்கப்படுகிறார். இறைவனின் திருமேனி சற்றே சாய்ந்திருப்பதால் கோணப்பிரான் என்ற பெயரும் உண்டு. அக்னி தீர்த்தமும், அக்னி பகவானுக்கும் தனி சந்நிதியும் இங்குள்ளது. இறைவனுக்கு மலர்மாலை கட்டிக் கொடுக்கும் தொண்டினைச் செய்து சிவனருள் பெற்ற முருகநாயனாரின் ஊரும் இதுவே. அப்பர் இவ்வூருக்கு வந்து உழவாரப்பணி செய்து கொண்டிருந்தார். பிரகாரத்தை சுத்தம் செய்யும்போது, ஓரிடத்தில் பொன்னும் மணியும் கிடந்தது. துறவியான அவருக்கு அந்தப் பொன்னும் மண்ணும் ஒன்றாகவே தெரிந்தது. அதனால், அவற்றை ஒதுக்கித் தள்ளி குப்பையில் இட்டார். பணத்தை விட பரமனே உயர்ந்தவன் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.