சாக்கை உய்யவந்தம்மன் கோயில் தேரோட்டம்
காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள சாக்கோட்டை சாக்கை உய்யவந்தம்மன் கோயிலில் ஆனி பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்திற்கு உட்பட்ட சாக்கை உய்யவந்தம்மன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆனி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெறும். தேர் பழுதடைந்ததால் கடந்த 4 வருடங்களாக திருவிழாவின் போது சகடையில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. தற்போது சாக்கை நாட்டார்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் உய்யவந்தம்மன் கோயிலுக்கு புதியதேர் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. 8ம் நாளான நேற்று (ஜூன்., 10ல்) காலை சிறப்பு அலங்காரத்துடன் அம்பாள் திருத்தேரில் எழுந்தருளி மாலை 4:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. தேர் பெரியவீதிகளின் வழியாக சுற்றி வந்து நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் பறவைக் காவடி, மயில்காவடி மற்றும் வேல் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். சாக்கோட்டை, புதுவயல் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.