உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

வில்லியனுார்: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவில், நேற்று தேரோட்டம் நடந்தது. கவர்னர் கிரண்பேடி வடம் பிடித்து, துவக்கி வைத்தார். வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 5ம் தேதி இரவு 8:30 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து நடைபெறும் விழாவில், காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், உற்சவ மரபினர்கள் சார்பில் இரவு 7:30 மணியளவில் சுவாமி மாட வீதியுலா நடைபெற்று வருகிறது. முக்கிய விழாவாக, நேற்று தேரோட்டம் நடந்தது. கவர்னர் கிரண்பேடி வடம்படித்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தார். முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, வைத்திலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்., சுகுமாறன், தீப்பாய்ந்தான் மற்றும் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். காலை 8:45 மணியளவில் துவங்கிய தேரோட்டம், நான்கு மாட வீதிகளில் வலம் வந்து, பிற்பகல் 2:45 மணியளவில் நிலையை அடைந்தது. வெயில் தாக்கத்தால் சோர்வடைந்த பக்தர்களால், தொடர்ந்து தேரை இழுக்க முடியாததால், வலம் வருவதில் தாமதம் ஏற்பட்டது.

பக்தர்கள் காயம்:தேர், நிலைப்பகுதியை நெருங்கியபோது உற்சாகமடைந்த பக்தர்கள்,  வேகமாக இழுத்ததால், தேர்முட்டி மண்டபத்தின் மீது மோதியது. இதில், மேல் பகுதியிலிருந்த பசு சிலையின் தலை உடைந்து விழுந்ததில், கணுவாப்பேட்டையை சேர்ந்த சுரேஷ், 35, என்பவருக்கு தலையில் பலத்த காயம், விஜி என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. கவர்னருக்காக காத்திருந்த முதல்வர், அமைச்சர்கள்:திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை, கவர்னர் துவக்கி வைப்பது வழக்கம். காலை 8:00 மணிக்கு மேல் தேரோட்டம் துவங்குவதாக இருந்தது.

குறித்த நேரத்தில் முதல்வர், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் வந்து, கவர்னர் வருகைக்காக காத்திருந்தனர். 8:45 மணியளவில் வந்த கவர்னரை, அமைச்சர் நமச்சிவாயம் வரவேற்றார். கவர்னர் வடம் பிடித்த பகுதியில் சற்று தள்ளி நின்று, கவர்னரை சந்திக்காமல் முதல்வர், சபாநாயகர் உள்ளிட்டோர் வடம் பிடித்தனர். தேரோட்டத்தை துவக்கிவைத்த பிறகு, கோவிலுக்கு சென்று கவர்னர் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு, பக்தர்களை ஒழுங்குபடுத்துவதற்காக வைத்திருந்த பேரிகார்டு மீது இடித்துக்கொண்டதில் கவர்னருக்கு காலில் சிறிய காயம் ஏற்பட்டது. தேர் திருவிழாவை முன்னிட்டு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், தொண்டு நிறுவனத்தினர் நீர்மோர், அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !