உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அத்தி வரதரை 24 மணி நேரமும் தரிசிக்க அனுமதி வேண்டும்!

அத்தி வரதரை 24 மணி நேரமும் தரிசிக்க அனுமதி வேண்டும்!

காஞ்சிபுரம் : காஞ்சி அத்தி வரதருக்கு நெய்வேத்தியம், அபிஷேகம் உள்ளிட்டவை இல்லாத நிலையில், 24 மணி நேரமும், தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம், ஜூலை, 1ல் துவங்குகிறது.வைபவத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும், கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

வசந்த மண்டபத்தை அழகுபடுத்தும் பணிகளும், கோவிலில் பந்தல் அமைக்கும் பணிகளும் துவங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், அத்தி வரதர் வைபவத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்து, பக்தர்கள் பலரும், தங்களது கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.அத்தி வரதர் தரிசனம், காலை, 6:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரையும், மதியம், 3:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரையும், தரிசன நேரம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அத்தி வரதருக்கு, அபிஷேகம், நெய்வேத்தியம் போன்றவை இல்லை என, கூறப்படுகிறது.

பக்தர்கள் நேரடியாக வந்து தரிசனம் செய்து, திரும்பி செல்ல வேண்டிய நடைமுறையே இருக்கும். மூலவருக்கு மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் நடை சாத்தப்பட்டு, பின் திறக்கப்படும்.மூலவரை, பகல், இரவு என, குறிப்பிட்ட நேரங்களில் தரிசனம் செய்ய முடியாது.ஆனால், அபிஷேகம், நெய்வேத்தியம் போன்ற எந்த முறையும் இல்லாத அத்தி வரதரை, 24 மணி நேரமும் தரிசிக்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.தரிசனம் செய்ய, 24 மணி நேரமும் வாய்ப்பு ஏற்படுத்தினால், லட்சக்கணக்கான பக்தர்கள், சிரமமின்றி தரிசனம் செய்யலாம் என, கருத்து எழுந்துள்ளது.

கூட்ட நெரிசல் ஏற்பட்டு, சிரமம் ஏற்படுவதை தவிர்க்கலாம். கோவில் நிர்வாகம், இந்த கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, பக்தர்களிடையே எழுந்துள்ளது. ஒரே வரிசை பின்பற்றப்படுமா?அத்தி வரதரை தரிசனம் செய்ய, பொது தரிசனம், 50 ரூபாய் கட்டண சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் வி.ஐ.பி.,க்கு என, தனி வரிசை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மூன்று வழிகளில், பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய உள்ளனர்.எந்த வகையான தரிசனமாக இருந்தாலும், வசந்த மண்டபத்துக்குள் செல்லும்போது, ஒரே வரிசையில் அனுமதிக்க வேண்டும் எனவும்; கடவுள் முன் பொது தரிசனத்தையும், கட்டண தரிசனத்தையும் பிரித்து காட்ட வேண்டாம் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !