ராம பக்த அனுமனுக்கு பஞ்சவடீயில் கும்பாபிஷேகம்
ADDED :2381 days ago
ராம நாமம் ஒலிக்கும் இடங்களில் நான் அவசியம் இருப்பேன் என்பது ஆஞ்ஜநேயர் வாக்கு. ராமனின் நாமத்திற்கே அவ்வளவு சிறப்பு என்றால், ராமச்சந்திர மூர்த்தி, சீதா தேவி, லட்சுமணன், பரதன், சத்ருக்கனன், சுக்ரீவன், அங்கதன், ஜாம்பவன், விபீஷணன், அனுமன் இப்படி பத்து திருமூர்த்தங்களுடன், பஞ்சபேர ஆராதனையுடன் பட்டாபிஷேக திருக்கோலத்தில் அருள்பாலிக்கும் இந்த தலத்தில் ஆஞ்ஜநேயரின் சக்தியும் அருளும் பல மடங்கு இருக்கும்.
எனவே இத்தலத்தில் அனுமனை வழிபடுவதினால் வீரம், கல்வி, செல்வம் மற்றும் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. ராமனைப் பற்றி எழுதும் போது ஒரு ஸ்லோகம் தவறாமல் குறிப்பிடப்படுவது உண்டு. அது சிவபெருமானால் பார்வதி தேவிக்கு எடுத்துரைக்கப்பட்ட
ஸ்ரீராம ராம ராமேதிரமே ராமே மனோரமே.
சகஸ்ரநாம தத்துல்யம்
ராம நாம வரானனே. என்ற மந்திரம் ஆகும். இந்த மந்திரத்தினை ஜபிப்பதால் மாதவனின் ஆயிரம் பெயர்களையும் முறையாகச் சொல்லக்கூடிய விஷ்ணு சகஸ்ரநாமத்தை சொல்வதற்குச் சமமாகும். இதை நாம் சொல்வதன் மூலம் மங்களம் உண்டாகும், பிறவிப் பயனைப் பெறலாம், வாழ்வில் நன்மை பயக்கும், இதிலிருந்தே அந்த ராம மந்திரத்தின் மகிமையை உணரலாம். இதன் பொருள்: (ராம, ராம = ராம, ராமேதி = இந்த ராம எனும் பெயர், ரமே =மகிழ்ச்சியடைகிறேன், ராமே =பெயரைத் தியானிப்பதில், மனோரமே = ஆழ்நிலை தியானத்தில் மன நிறைவு தருகிற, சகஸ்ரநாம = விஷ்ணுவின் 1000 பெயர்களை, தத்துல்யம் = சொல்வதற்கு ஈடாகும். ராம நாம = பவித்திரமான ராமசந்திர மூர்த்தியின் ராம எனும் பெயர், வர = அழகிய, ஆனனே = முகம், கொண்டவனே) இந்த புண்ணிய ஸ்தலத்தில் இன்னும் 2 நாட்களில் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது.