உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சவடீ ஆஞ்சநேயர் கும்பாபிஷேகம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம்

பஞ்சவடீ ஆஞ்சநேயர் கும்பாபிஷேகம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம்

புதுச்சேரி: மங்கள வாத்தியங்கள் முழங்க பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி -திண்டிவனம் சாலை பஞ்சவடீயில், 36 அடி உயர விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ஆகம விதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பதால், இக்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வேங்கடாஜலபதி சன்னதி மற்றும் ராஜகோபுரம், மூலவர் சன்னதி கோபுரங்களுக்கு, இன்று( 23ம் தேதி) மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது. விழாவில் மூலவர் கலசத்திற்கு சகடபுர ஸ்ரீவித்யாபீடாதீஸ்வர ஸ்ரீவித்யாபிநவ ஸ்ரீ கிருஷ்ணா நந்ததீர்த்த சாமிகள் புனித நீர் ஊற்றினார்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் யாகசாலை அமைக்கப்பட்டு, யாகசாலை பந்தலில், 37 குண்டங்களில் கும்பாபிஷேக பூர்வாங்க பூஜைகள், கடந்த 17ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 18ம் தேதி காலை 8:30 மணிக்கு மகா சுதர்சன ஹோமம், லட்சுமிநரசிம்மர் ஹோமம், தன்வந்திரி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், உற்சவர் சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. 19ம் தேதி காலை ஆச்சார்யார்கள் அழைப்பு, பகவத் பிரார்த்தனை, அகல்மஷ ஹோமம், பூதசுத்தி கும்ப பூஜை, வேத பிரபந்த பாராயணம் துவக்கம், மாலை 5:00 மணிக்கு புண்யாஹம், இயற்கையான முறையில், பட்டாச்சாரியார்களால் அரணி கட்டையில் இருந்து கடைந்து எடுக்கப்படும் சுத்த அக்னி கொண்டு யாக வேள்விக்கான அக்னி மதனம் நடந்தது. 19ம் தேதி காலை, சுப்ரபாதம், விஸ்வரூபம், திருப்பாவை திருப்பள்ளி எழுச்சி, புண்யாஹம், காலசாந்தி பூஜைகள் நடந்தது.

21ம் தேதி சுப்ரபாதம், விஸ்வரூபம், சேவா காலம், புண்யாஹம், காலசாந்தி பூஜை, மகாசாந்தி ஹோமம், உற்சவர் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீநிவாச திருமஞ்சனமும், 22ம் தேதி மாலை, 6:00 மணிக்கு தசதரிசன பூஜைகள் நடைபெற்றது. கும்பாபிஷேக தினமான இன்று (23ம் தேதி) காலை 7:00 மணிக்கு புண்யாஹம், காலசாந்தி பூஜை, 8:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, பஞ்சாக்னி, 9:00 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து, காலை  ராஜகோபுரம் மற்றும் அனைத்து சன்னதி விமானங்களுக்கும் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து, மூலவர்கள் மகா சம்ப்ரோக்ஷணம், மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பரவசத்துடன் ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !