உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வர(ம்)தா வரதா என காஞ்சியில் குவியும் பக்தர்கள்

வர(ம்)தா வரதா என காஞ்சியில் குவியும் பக்தர்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வசந்த மண்டபத்தில் சயன கோலத்தில் அருள்பாலிக்கும் அத்தி வரதரை இன்றும் பக்தர்கள் காத்திருந்து, தரிசனம் செய்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு பின், அத்தி வரதர் வைபவம், நேற்று கோலாகலமாக துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், நேற்று அதிகாலை முதல் வரிசையில் நின்று, கோவில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய, அத்தி வரதரை தரிசித்தனர். அத்தி வரதர் வைபவத்திற்காக, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும், ஹிந்து அறநிலைய துறையும் இணைந்து, பக்தர்கள் வசதிக்காக, ஒரு மாதத்திற்கும் மேலாக, பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தன.

இந்நிலையில், கடந்த வெள்ளி அதிகாலை, 2:00 மணிக்கு, வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள, அனந்தசரஸ் குளத்தில் வீற்றிருந்த அத்தி வரதரை வசந்த மண்டபத்திற்கு கொண்டு வந்தனர். சயன கோலத்தில் வைக்கப்பட்டிருந்த அத்தி வரதர் சிலைக்கு, நேற்று முன்தினம் ஹோமம், புன்னியாவதனம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தைல காப்பு சாத்தப்பட்டது. கோவில் வசந்த மண்டபம் முழுக்க, பழங்கள், பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, அத்தி வரதர் வைபவ தரிசனம், நேற்று காலை, 6:00 மணிக்கு துவங் கியது. முன்னதாக, சுப்ரபாத பாடல்கள் பாடப்பட்டன.

கவர்னர்: காஞ்சிபுரம் கோவில் இட்லி, சர்க்கரை பொங்கல், லட்டு, மைசூர் பாகு உள்ளிட்டவை, நிவேதனமாக படைக்கப்பட்டன.தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், காலை, 5:45 மணிக்கு கோவிலுக்கு வந்தார். உடன், ஹிந்து அறநிலைய துறை அமைச்சர், ராமச்சந்திரன், கலெக்டர் பொன்னையா, டி.ஆர்.ஓ., சுந்தரமூர்த்தி ஆகியோரும் வந்தனர்.கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர், 6:15 மணிக்கு, அத்தி வரதரை தரிசித்து, கோவிலில் இருந்து புறப்பட்டனர்.

இரண்டு மணி நேரம்: அதன்பின், அத்தி வரதர் தரிசனத்திற்காக, பக்தர்கள் கோவிலின் கிழக்கு கோபுர வாயில் வழியாக அனுமதிக்கப்பட்டனர். பொது தரிசனம், 50 ரூபாய் சிறப்பு தரிசனம் என, இரு வழிகளில், பக்தர்கள் கோவிலுக்குள் அனுப்பப்பட்டனர். பக்தர்கள் வரிசையில் நிற்கும் வழியில், குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.அதிகாலை, 4:00 மணி முதல், கிழக்கு கோபுர வாசலில், பக்தர்கள் குவிய துவங்கினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததால், கோவிலின் மாட வீதிகளில், இரண்டு நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்றனர்.பொது தரிசன வரிசையில், இரண்டு மணி நேரம் காத்திருந்து, தரிசனம் செய்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.

பக்தர்கள் வசதிக்காக, பஸ் வசதி, கழிப்பறை, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.ஓரிக்கை, ஒலிமுகமது பேட்டை, பச்சையப்பன் கல்லுாரி வளாகம் ஆகிய இடங்களில், தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டதால், கிராமப்புறங்களில் இருந்து, காஞ்சிபுரம் வந்தவர்கள் சிரமப்பட்டனர். மினி பஸ்சில், இலவசம் என, முதலில் கூறப்பட்டது. ஆனால், நேற்று, 10 ரூபாய் பயணியரிடம் வசூலிக்கப்பட்டது. முதியோர், மாற்று திறனாளிகளுக்கு, வீல் சேர், பேட்டரி கார் வசதி செய்யப்பட்டிருந்தது. கிழக்கு கோபுரம் நுழைவு பகுதியில், பேட்டரி கார், பக்தர்களுக்காக தயார் நிலையில் இருந்து, முதியோர் மற்றும் மாற்று திறனாளி கள் வசந்த மண்டபம் வரை அழைத்து செல்லப்பட்டனர்.உயர் நீதிமன்ற நீதிபதி, ஆதிகேசவலு, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி, வசந்த லீலா, மாவட்ட நீதிபதி, கருணாநிதி, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், காஞ்சிபுரம், எம்.எல்.ஏ., எழிலரசன் உட்பட, பலரும் தரிசனம் செய்தனர்.பெற்றோர் அழைத்து வரும் குழந்தைகள் தொலை யாமல் இருக்க, சைல்டு லைன் சார்பில், அவர்களின் கைகளில், டோக்கன் கட்டப்பட்டது. குழந்தை பெயர், தந்தை பெயர், மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்கள் எழுதப்பட்டு கைகளில் ஒட்டினர்.மாவட்ட, எஸ்.பி., சந்தோஷ் தலைமையில், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நான்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 20 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 48 ஆய்வாளர்கள் தலைமையில், 2,656 போலீசார், நேற்று பாதுகாப்பு பணியில்ஈடுபட்டனர். மேலும், 14 கண்காணிப்பு கோபுரங்கள், 16 பைக் ரோந்து போலீசார், 10 சோதனைச்சாவடிகள், போலீஸ் சார்பில் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

மூலவர் தரிசனத்துக்கு தடை: அத்தி வரதர் தரிசனத்துக்கு, கிழக்கு கோபுரம் வழியாகவும், மூலவர் தரிசனத்துக்கு, மேற்கு கோபுர வாசல் வழியாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என, கலெக்டர் பொன்னையா முன்னதாக தெரிவித்திருந்தார்.ஆனால், மேற்கு கோபுர வாசலில், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. போலீசார் கெடுபிடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுஇருந்தனர். பக்தர்கள் பலர், போலீசாரிடம் வாக்கு வாதம் செய்தனர். அத்தி வரதர் தரிசனம் தனி வழியிலும், மூலவர் தரிசனம் தனி வழியிலும் என, தெரிவித்த பின், மூலவர் தரிசனம், நேற்று, முற்றிலும் தடை செய்யப்பட்டது.

சகஸ்ர நாமம் அர்ச்சனை டிக்கெட்டுகள், அறநிலையத் துறை, www.hrce.gov.in என்ற இணையதளத்தில், இன்று மதியம், 2:00 மணி முதல் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !