அரங்காதருக்கு தைலக்காப்பு: மூலவர் சன்னதியில் குடியேறிய உற்சவர்
ஈரோடு: கோட்டை கஸ்தூரி அரங்கநாதருக்கு, தைலக்காப்பு செய்ப்பட்டதால், ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவர், மூலவர் சன்னதிக்குள் எழுந்தருளினார். சுதை மண் சிலையான, ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதருக்கு, ஆண்டுக்கு ஒருமுறை தைலக்காப்பு செய்யப்படுகிறது. நடப்பாண்டு தைலக்காப்பு சாற்றுமறை நேற்று நடந்தது. இதையொட்டி திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, ஹோமம், பூர்ணாகுதி, உற்சவருக்கு திருமஞ்சனம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு திருவாராதனம், சாற்று முறை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்தூரி அரங்கநாதர் மூலஸ்தானம் சேருதல் நடந்தது. மூலவருக்கு தைலகாப்பு சாத்துப்படியால், 48 நாட்களும் மூலவரின் பாதம் மற்றும் சிரசை தவிர திருமேனியை, பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாது. இதனால் மூலவர் சன்னதியில், உற்சவர் அருள் பாலிப்பார். பச்சை பட்டுத்திரையால் மூலவர் திருமேனி மறைக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.