வரதராஜ பெருமாள் கோவில் ராஜகோபுரம் பணி மும்முரம்
ராசிபுரம் : ராசிபுரம் பொன் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூலவரை தரிக்கச் செல்லும் முன்புற நுழைவு வாயிலில், ஐந்தரை அடி உயரத்தில் இரண்டு சிங்க சிலைகள் அமைக்கும் பணி, முடியும் தருவாயில் உள்ளது. ராசிபுரம், மேட்டு தெருவில், 200 ஆண்டுகள் பழமையான பொன் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, மூலவராக வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தற்போது, கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு ராஜகோபுரம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 80 அடி உயரம் கொண்டதாக கட்டப்படும் ராஜகோபுரப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மூலவரை தரிசிக்கச் செல்லும் நுழைவு வாயிலில், ஐந்தரை அடி சிங்க சிலைகள் செய்யும் பணி, முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியில், மாமல்லபுரத்தை சேர்ந்த சிற்பி செல்வம் தலைமையிலான சிற்பிகள் ஈடுபட்டுள்ளனர். சிங்கத்தின் வாயில் உருண்டை அமைக்கப்பட்டுள்ளது. அது உள்ளே சுற்றும்; ஆனால், வெளியே எடுக்க முடியாது. கலை நயத்துடனும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. ராஜகோபுரம், மகா மண்டபம் அமைக்கும் பணிகள் முடிந்தவுடன், மூலவர் கோபுர பணிகள் துவங்கப்படும். அதை தொடர்ந்து, தனி சன்னதிகள் புதுபிக்கப்படும். கோவிலின் ராஜகோபுர பணிக்காக, அரசு, 40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், பக்தர்களின் நன்கொடையை கொண்டும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் ஒன்றரை ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.