இட்டகவேலி முடிப்புரை நீலகேசி அம்மன் கோயிலில் நாளை தூக்கத்திருவிழா!
குலசேகரம் : இட்டகவேலி முடிப்புரை நீலகேசி அம்மன் கோயில் தூக்கத்திருவிழா நாளை நடக்கிறது. கோயில் திருவிழா கடந்த 18ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தூக்கத்திருவிழாவில் 190 குழந்தைகளுக்கு தூக்கநேர்ச்சை நடத்தப்படுகிறது.குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நோய் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு அம்மனை நினைத்து நேர்த்தி கடன்படுவர்.இந்த நேர்த்திகடன் செலுத்துவதற்கு தாய்மார்கள் தங்கள் ஒரு வயதான குழந்தைகளை தூக்குமரத்தில் ஏறி நேர்ச்சை நடத்துவார்கள். விழா பறம்பில் அமைக்கப்பட்டுள்ள பச்சைப் பந்தலில் மர உரியில் மயில் இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வடிவத்தை வைத்து பூஜை செய்து அதை சுற்றி தூக்கு வண்டியில் வில்லின் முனையில் விரதம் இருக்கும் பக்தரை வில்லின் உள்ள கயிற்றில் கட்டி தொங்கியபடி அவரது கையில் நேர்ச்சைக்கான குழுந்தை கொடுக்கப்பட்டு,பக்தர்கள் வண்டியை பச்சை பந்தலை சுற்றி அம்மே சரணம்,தேவி சரணம் என்று கோஷம் முழங்கியபடி இழுத்து வருவர்.இப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் நேர்ச்சை நடத்தப்படும்.இந்த தூக்க நேர்ச்சையை காண மாவட்டத்தின பல பகுதிகள் மற்றும் பக்கத்து மாநிலத்தில் இருந்தும் அதிக அளவு பக்தர்கள் கலந்து கொள்வர். நாளை(24ம் தேதி)காலை பூஜை,எழுந்தருளல்,மதியம் அன்னதானம்,பின்பு தூக்க நேர்ச்சை செய்வோர் பனங்கோடு தெக்கில் இருந்து பறம்பு நோக்கி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்பு குத்தியோட்டம்,பூமாலை,தாலப்பொலி,மஞ்சள்குடம்,துலாபாரம்,உருள்நேர்ச்சை போன்ற நேர்ச்சைகள் நடக்கிறது.அதை தொடர்ந்து தூக்க நேர்ச்சை நிகழ்ச்சிகள் துவங்குகிறது.நீலகேசி அம்மனுக்கு நெருப்பு படாத இளநீர், நுங்கு, பலாப்பழம், வாழைப்பழம் பூஜைக்கு படைக்கப்படுகிறது.இங்கு பிரசாதமாக மஞ்சள்பொடி வழங்கப்படுகிறது. மேலும் பூஜாரி பூஜை செய்வதற்கு கமுகு மரத்தில் உள்ள பூவை தான் பூஜைக்கு பயன்படுத்துவர்.கோயில் பூஜாரியாக தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் தொன்று தொட்டு பூஜை செய்து வருகிறார்.இதுவே இந்த கோயிலின் சிறப்பாகும். மலையாள மொழி பேசும் மக்கள் நடத்தும் கோயிலில் நாஞ்சில் நாட்டு பூஜாரி தமிழில் பூஜை செய்வது மிகவும் சிறப்பாகும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 2007 திருவிளக்கு பூஜை 25ம் தேதி நடக்கிறது.26ம் தேதி கமுகு மரத்தை வேருடன் பெயர்த்து எடுத்து அதை பக்தர்களும் குடும்பத்தாரும் இழுத்து வரும் முக்கிய நிகழ்ச்சி நடக்கிறது.27ம் தேதி பொங்கல் வழிபாடு நடக்கிறது.விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.