மணப்பாக்கம் கோவிலில் தீ மிதி விழா கோலாகலம்
செங்கல்பட்டு: மணப்பாக்கம் கன்னியம்மன் கோவிலில், தீ மிதி விழா, நேற்று, கோலாகலமாக நடைபெற்றது. செங்கல்பட்டு அடுத்த, மணப்பாக்கம் கிராம பாலாற்றங்கரையில், கன்னியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில், இந்த ஆண்டு ஆடித்திருவிழா, ஜூலை, 19ம் தேதி, சிறப்பு அபிஷேகத்துடன் துவங்கியது.தொடர்ந்து, மூன்றாம் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, நேற்று காலை, 5:00 மணிக்கு, கன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், அம்மனை தரிசித்தனர். பின், மாலை, 6:00 மணிக்கு, தீ மிதித்தனர்.சிறுவர்கள் முதல் பெரியோர் வரை, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அக்னி குண்டத்தில் இறங்கி, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். பல மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக, செங்கல்பட்டிலிருந்து மணப்பாக்கத்திற்கு, அரசு சார்பாக, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.அதேபோல், கூடுவாஞ்சேரி அடுத்த, காயரம்பேடு கன்னியம்மன் கோவிலிலும், பக்தர்கள், தீமிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.