ராமேஸ்வரம் கோயிலில் மாலை மாற்று வைபவம்
ராமேஸ்வரம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று சுவாமி, அம்மன் மாலை மாற்று வைபவம் நடந்தது, இன்று ஆடித் திருக்கல்யாணம் நடக்கிறது.
ஜூலை 25ல் கொடி ஏற்றத்துடன் துவங்கிய ஆடித் திருக்கல்யாண திருவிழாவில், நேற்று ஆடித் தபசை முன்னிட்டு காலை 6:30 மணிக்கு வெள்ளி கமல வாகனத்தில் அம்மன் தபசு மண்டகப்படியில் எழுந்தருளியதும், கோயில் நடை அடைக்கப்பட்டது.பகல் 11:00 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி தபசு மண்டபத்தில் எழுந்தருளினார். பகல் 2:40 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் இணை ஆணையர் கல்யாணி, மேலாளர் முருகேசன் உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர், தபசு மண்டகபடியில் இருந்து சுவாமி, அம்மன் மாலை 5:00 மணிக்கு கோயிலுக்கு திரும்பியதும், நடை திறக்கப்பட்டது. இன்று இரவு 8:00 மணிக்கு கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி, அம்மனுக்கு ஆடித்திருக்கல்யாணம் விழா நடக்கிறது.