நன்செய் இடையாறு மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா!
ப.வேலூர்: நன்செய் இடையாறு மாரியம்மன் கோவிலில் நடந்த விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கியும், தலையில் பூவாரி இரைத்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ப.வேலூர் அடுத்த நன்செய் இடையாறில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 4 மணிக்கு, தீ குண்டம் பற்றவைக்கப்பட்டது. தொடர்ந்து மதியம் 2 மணிக்கு, காவிரி ஆற்றுக்கு சென்ற ஆண், பெண் பக்தர்கள் புனித நீராடி ஊர்வலமாக வந்து கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில், 3,000க்கும் மேற்பட்ட ஆண்கள் இறங்கி அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், 10 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் தலையில் பூவாரி இரைத்து ஸ்வாமிக்கு வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜை நடந்தது. இன்று (மார்ச் 27) அதிகாலை 4 மணிக்கு கிடாவெட்டும், காலை 10 மணிக்கு பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் அம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். மார்ச் 28ம் தேதி அதிகாலை 4 மணிக்கு, கம்பம் பிடிங்கி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து காலை 10 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், ஊர் மக்கள் செய்துள்ளனர்.