சென்னிமலையில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா
சென்னிமலை: சென்னிமலையில், சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சைவ சமயத்தில் போற்றப்படும், நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார், திருமணம் செய்ய முயன்ற போது, சிவபெருமான் கிழவன் வேடம் தரித்து சென்று, அதை தடுத்தார்.
சுந்தரரின் பிறவி நோக்கம், இறைவனை புகழ்ந்து பாடுவது என்பதை உணர்த்தி, சிவபெருமான் அவ்வாறு தடுத்தாட்கொண்டார். அதன்பின், பல கோவில்களுக்கு சென்று, சிவபெருமானை பாடியுள்ளார். திருமணத்தை தடுத்த சிவபெருமானே, இரண்டு பெண்களை சுந்தரரருக்கு திருமணம் செய்து வைத்தார். பன்னிரு திருமுறைகள் மற்றும் தேவாரத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. சென்னிமலை டவுன் கிழக்கு ராஜா வீதியில் அமைந் துள்ள, கைலாசநாதர் கோவிலில் நேற்று (ஆக., 7ல்) சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா வை முன்னிட்டு அபிஷேகம், அலங்கார பூஜை, 63 நாயன்மார்களுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார் உற்சவர் புறப்பாடு நடந்தது. முன்னதாக, தேவார இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள், நாயன்மார்களை வழிபட்டனர்.