உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பட்டூர் கோவிலில் ஏப்., 4ம் தேதி திருத்தேர்!

திருப்பட்டூர் கோவிலில் ஏப்., 4ம் தேதி திருத்தேர்!

திருச்சி: திருச்சி அருகே திருப்பட்டூர் பிரம்ம சம்பத் கௌரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவிலின் பங்குனி திருவிழாவுக்கு பயன்படுத்தப்படும் திருத்தேர், கடந்த 25 ஆண்டுக்கு முன் பழுதடைந்து, சீரமைக்கப்படாததால் உபயோகமற்று, மண்ணாக மக்கிப்போனது. கோவில் நிர்வாகம் மற்றும் கிராம மக்கள் சார்பில், கோவிலுக்கு புதிய தேர் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசின் எட்டு லட்ச ரூபாய், நன்கொடையாளர்களின் இரண்டு லட்ச ரூபாய் என மொத்தம் 10 லட்ச ரூபாய் செலவில் புதிய தேர் செய்யும் பணி கடந்தாண்டு துவங்கியது. மொத்தம் 10 முக்கால் அடி உயரத்தில் செய்யப்பட்ட தேர், அலங்காரத்தோடு சேர்த்து 28 அடி உயரத்துக்கு தயார் செய்யப்பட்டது. கடந்த 25ம் தேதி புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது. பங்குனி தேரோட்ட திருவிழா, கடந்த 26ம் தேதி துவங்கியது. தொடர்ந்து தினந்தோறும் நடக்கும் நிகழ்ச்சிகளில் பல்வேறு வாகனங்களில், ஸ்வாமியும், அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். முக்கிய நிகழ்ச்சியாக, தேரோட்டம்,ஏப்ரல் நான்காம் தேதி காலை 6.30 மணிக்கு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சம்பத்குமார், தக்கார் கவுதமன் மற்றும் கோவிலுக்கு பாத்தியப்பட்ட கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !