மதுரையில் விநாயகர் சிலைகளை கரைத்த 2 நாளில் கழிவு அகற்ற உத்தரவு
மதுரை: மதுரையில் செப்., 2 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை கரைப்பது, பூஜை செய்வது, ஊர்வலம் நடத்துவது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுபடி சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி கீழ்காணும் விதிமுறைப்படி அனுமதி வழங்கப்படும் என போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார். கட்டுப்பாடுகள்...
* பொது இடத்தில் விநாயகர் சிலை நிறுவினால் உள்ளாட்சி, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்பு மற்றும் ஒலிபெருக்கிக்கான தடையில்லா சான்று அவசியம். தற்காலிக மின் இணைப்பு, மின் இணைப்பு ஆதார கடிதத்தை போலீசாரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
* சிலைகள் பிளாஸ்ட் ஆப் பாரிஸ், தடை செய்த பொருட்களில் செய்திருக்கக்கூடாது. களிமண்ணால் செய்து, இயற்கை நிறங்கள் பூசியிருக்க வேண்டும். உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது. அனுமதித்த வழித்தடங்களில் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க வேண்டும். முதலுதவி பெட்டி இருக்க வேண்டும்.
* சிலைகளை வழிபாட்டு தலம், மருத்துவமனை, கல்வி நிலையம், மக்கள் எதிர்க்கும் இடத்தில் வைக்கக்கூடாது. காலை, மாலையில் தலா 2 மணி நேரம் மட்டும் ஒலிபெருக்கி ஒலிக்க அனுமதிக்கப்படும். ஒலியின் டெசிபல் நிர்ணயித்த அளவுக்குள் இருக்க வேண்டும்.
* சிலை நிறுவும் இடத்தில் அரசியல், மதச்சார்புள்ள அமைப்பு, அதன் தலைவர்களுக்கு ஆதரவான பிளக்ஸ் போர்டு இருக்கக்கூடாது. சிலை பாதுகாப்பிற்காக இரு தன்னார் வலர் களை 24 மணி நேரமும் நியமிக்க வேண்டும். மத உணர்வை துாண்டும் வகையில் கோஷம் எழுப்பக்கூடாது. சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல மினி லாரி, டிராக்டர் பயன்படுத் தலாம்.
* மாட்டு வண்டி, மூன்று சக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை. ஊர்வலத்தில் வெடி வெடிக்கக் கூடாது.
* கலெக்டர், ஆர்.டி.ஓ., போலீசார், மாசு கட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சி அமைப்பு கள் பரிந்துரைத்த இடங்களில் சிலைகளை கரைக்க வேண்டும்.
* பொது இடத்தில் நிறுவிய சிலைகளை 5 நாட்களுக்குள் கரைக்க வேண்டும். அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆறு, நீர்நிலைகளில் இருந்து கழிவுகளை அகற்ற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.