பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று தீர்த்தவாரியும், முக்கூரணி மோதகம் படையலும், இரவில் பஞ்சமூர்த்தி வீதி உலாவும் நடந்தது.
இங்கு இந்தாண்டு ஆக.24ல் சதுர்த்திப் பெருவிழா துவங்கியது. 6ம் நாளில் கஜமுக சூரசம்ஹாரம் நடந்தது. 9ம் நாளில் விநாயகருக்கும், சண்டிகேஸ்வரருக்கும் தேரோட்டம் நடந்தது. மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. நேற்று காலை 9:40 மணிக்கு தீர்த்தவாரியை முன்னிட்டு கோயில் திருக்குள தெற்கு படித்துறையில் மூலவர் சன்னதிக்கு நேராக உற்ஸவ விநாயகர் எழுந்தருளினார்.
படித்துறையில் மூலவரின் பிரதிநிதியாக அங்குசத்தேவர் எழுந்தருளினார். தொடர்ந்து அங்குசத்தேவருக்கு தலைமைக்குருக்கள் பிச்சை சிவாச்சாரியரால் அபிஷேகம் நடந்தது.அங்குசத்தேவருக்கு திருக்குளத்தில் சோமசுந்தரம் சிவாச்சாாரியாரால் மூன்று முறை மூழ்கி தீர்த்தவாரி நடந்தது. உற்ஸவர், சண்டிகேஸ்வரர் வீதி வலம் வந்தனர். பகல் 1:30 மணிக்கு மூலவருக்கு அபிஷேக,ஆராதனை நடந்து 18 படி பச்சரிசியால் செய்யப்பட்ட முக்கூரணி மோதகம் படையலிடப்பட்டது. இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி வலம் வந்தனர். சதுர்த்திப் பெருவிழா நிறைவடைந்தது.ஏற்பாட்டினை அறங்காவலர்கள் அமராவதி புதுார் ராம.அண்ணமாலை, தேவகோட்டை மீ.நாகப்பன் செய்திருந்தனர்.