உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய விடிய தேனபிஷேகம்

பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய விடிய தேனபிஷேகம்

தஞ்சாவூர்: கும்பகோணம் அடுத்த திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி கோவிலில் அருள்பாலிக்கும் பிரளயம் காத்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விடிய,விடிய தேனபிஷேகம் நடைபெற்றது.

சோழவளநாட்டில் நால்வரால் பாடல் பெற்றதும்,வரலாற்று புகழுடையதும்,  மதுரை ஆதீனத்துக்கு சொந்தமானதாக திருப்புறம்பியத்தில் உள்ள கரும்படு சொல்லியம்மை உடனாய   சாட்சிநாதசுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் பிரளயம் காத்த விநாயகர் தனி சன்னதி கொண்டு  அருள்பாலித்து வருகிறார். இவரை தேனபிஷேக பெருமான் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். ராகு அந்தர கற்பத்தில் ஏற்பட்ட பிரளயத்தில் திருப்புறம்பியம் திருத்தலத்தை கருணையால் அழியாவண்ணம் காத்தவர் பிரளயம் காத்த விநாயகர். நத்தைகூடு, கிளிஞ்சல், கடல்நுரை ஆகிய கடல்  பொருட்களை தெய்வமேனியை கொண்டவராக பிரளயம் காத்த  விநாயகர் எழுந்தருளி காட்சியளித்து வருகிறார். வருண பகவனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டுமே  தேனபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் அபிஷேகம் கிடையாது.

அதன் படி நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 35 வது ஆண்டாக மாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்கியது. பின்னர் (இன்று) 3ம் தேதி அதிகாலை 4.30 மணி வரை தேனபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகம்  செய்யப்படும் தேனானது,  விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்படுவதும், அபிஷேக வேளையில் விநாயகர் செம்பவள மேனியராய் காட்சி தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துகழகம் சார்பில், கும்பகோணத்திலிருந்து சிறப்பு பஸ் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !