பல்லடம் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் தேச ஒற்றுமை வலியுறுத்தல்
பல்லடம்:தேச ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், பல்லடம் பாரத மாணவர் பேரவையின் சார்பில், விநாயகர் ஊர்வலம் நடந்தது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல்லடத்தில் பல்வேறு இந்து இயக்கங்களின் சார்பில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, அவை விசர்ஜனம் செய்யப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், பல்லடம் பாரத மாணவர் பேரவையின் சார்பில், 12 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விசர்ஜனம் செய்ய ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.பாரத மாணவர் பேரவையின் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். நகர தலைவர் ஸ்ரீதர், மற்றும் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேச ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தோற்றம் கொண்ட உடுமலை ஷேக் மைதீன் என்பவர் பங்கேற்றார்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன், பாரத் மாதா இந்து மக்கள் இயக்க தலைவர் சாய்குமரன் பங்கேற்றனர். என்.ஜி.ஆர்., ரோடு, திருச்சி ரோடு வழியாக சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, சாமளாபுரம் குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டன.