உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம் கோலாகலம்!

ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம் கோலாகலம்!

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பிரம்மோற்சவம், கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, வெள்ளித் தேர் உற்சவம் கோலாகலமாக நடந்தது. நேற்று காலை பிரபல உற்சவமான தேரோட்டம் நடந்தது. நேற்று, காலை 6 மணிக்கு ஏகாம்பரநாதர், ஏலவார் குழலியுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் அசைந்தபடி வீதியுலா வரத் துவங்கியது. இரண்டு ஜே.சி.பி., இயந்திரங்கள் தேரை பின்பக்கமாக தள்ளியபடி வந்தன. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் "ஓம் நமச்சிவாய என பக்தி பரவசத்துடன் பிரார்த்தித்தனர். தேர் நான்கு ராஜவீதிகளை வலம் வந்தது. மரத்தேரின் பின்னால் சிறிய தேரில் விநாயகர், முருகப்பெருமான் வந்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு நின்று சுவாமியை வழிபட்டனர். தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. அசம்பாவிதங்கள் ஏற்படாமலிருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை ஆறுமுகப்பெருமான் எடுப்பு ரதக்காட்சியும், மாலை 5 மணிக்கு பிட்சாடனர் தரிசனமும், இரவு குதிரை வாகனம் உற்சவமும் நடைபெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !