பழங்கால பிடாரி அம்மன் சிலை கடலுார் அருகே கண்டெடுப்பு
கடலுார்: கடலுார் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது, கருங்கல்லால் ஆன, 3 அடி உயரமுள்ள பிடாரி அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. கடலுார் மாவட்டம், ஆலப்பாக்கம் அடுத்த தியாகவல்லி கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை, 45; இவர், வீடு கட்ட, வீட்டின் பின்புறம் உள்ள காலி இடத்தில், நேற்று காலை, மகன் ராஜேஷ் கண்ணனுடன் பள்ளம் தோண்டினார்.
மூன்றடி ஆழத்தில் பள்ளம் தோண்டிய போது, மூன்றடி உயரம், ஒன்னரை அடி அகலத்தில் கருங்கல்லால் ஆன பிடாரி அம்மன் சிலையும், இரண்டடி உயரத்தில் பீடமும் இருந்தது. அம்மன் சிலையை வெளியே எடுத்தபோது, தலை, உடல், பீடம் என, மூன்று பாகங்களாக உடைந்து கிடந்தது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் சிலையை பார்க்க கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த கடலுார் தாசில்தார் செல்வக்குமார், வருவாய் ஆய்வாளர் ரகுநந்தன், வி.ஏ.ஓ., சுந்தரர்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, அம்மன் சிலையை மீட்டு, அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் ஜெயரத்னா கூறுகையில், ‘அம்மன் இடது கை உடைந்துள்ளது. ஒரு வலது கையில் திரிசூலம், மற்றொரு வலது கையில் உடுக்கை உள்ளது. அம்மன் கழுத்தில் ஆபரணங்கள் என அழைக்கப்படும் கண்டிகை, சரபலி, சவடி உள்ளது. சிலை 16 அல்லது 17ம் நுாற்றாண்டு காலத்தைச் சேர்ந்தாக இருக்கலாம்’ என்றார்.