பங்குனி உத்திரப் பெருவிழா ராமநாதபுரம் கோயில்களில் கோலாகலம்!
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் பங்குனி உத்திர பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தும் பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த மார்ச்.,27ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் ஆன்மிக சொற்பொழிவுகளும், சிறப்பு தீபராதனைகளும் நடந்தது. முக்கிய விழாவான, நேற்று காலை 8 மணிக்கு நொச்சிவயல் ஊரணிகரையில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து பால்காவடி, பால்குடம் புறப்பட்டு முருகன் கோயிலை பகல் 12.30 மணிக்கு வந்தடைந்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. காப்புகட்டி விரதமிருந்து நூற்றுகணக்கான பக்தர்கள் "அரோகரா கோஷமிட்டு பால்குடம், காவடி, அலகுகுத்தி, பறவைகாவடி எடுத்து முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வழியெங்கும் பல்வேறு அமைப்பின் சார்பில் மோர், தண்ணீர் பந்தல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7.45 மணிக்கு கோயில் முன்பாக பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ராமநாதபுரம் நகராட்சி தலைவர் சேகர், எம்.ஆர்.டிரேடர்ஸ் இன்ஜினியர் ராமகிருஷ்ணன், ரெட்டையூரணி ஊராட்சி தலைவர் சத்தியமூர்த்தி, கனகமணி மருத்துவமனை டாக்டர்கள் அரவிந்தராஜ், பால்ராஜ், மதுரம், கனகப்பிரியா, அ.தி.மு.க., சட்டசபை தொகுதி செயலாளர் முருகேசன். வாசுதேவன் பாத்திரக்கடை உரிமையாளர்கள் ஜோதிமணி, சிங்காரவேலு, மோகன் ஸ்டோர் உரிமையாளர்கள் மோகன், சங்கர், சோமு, வேணு, ஊராட்சி தலைவர் முனியம்மாள் செல்வக்குமார், எல்.ஐ.சி., ஏஜன்ட் முருகேசன், வர்த்தக சங்க பொருளாளர் செல்வராஜ். உச்சிப்புளி ஆத்மஜோதி சேவை மைய நிறுவனர் விஸ்வநாதன், என்மணங்கொன்டான் ஊராட்சி தலைவர் காளீஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.
தேரோட்டம்: பங்குனி உத்திர விழாவையொட்டி திருப்புல்லாணி ஆதி ஜெகன்நாதர் பெருமாள் சுவாமி கோயிலில் தேரோட்டம் நடந்தது. நேற்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஆதி ஜெகந்நாத பெருமாள் சுவாமி நான்குரத வீதிகளிலும் வலம் வந்து அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அகோபில மடத்தில் நடந்த அன்னதானத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திவான் மகேந்திரன், செயலக அலுவலர் சாமிநாதன், கண்காணிப்பாளர் கண்ணன் பங்கேற்றனர்.