உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் நடக்கும் பூஜைகளில் ஆசார குறைபாடு: ஜோதிடர்கள் தகவல்!

சபரிமலையில் நடக்கும் பூஜைகளில் ஆசார குறைபாடு: ஜோதிடர்கள் தகவல்!

சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னதி, சாஸ்திர முறைப்படி அமைக்கப்படவில்லை. பழங்காலத்தில் இருந்த அளவு பூஜைப் பொருட்களே, கோவில் வளர்ச்சி அடைந்த பிறகும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், தெய்வம் அதிருப்தியில் உள்ளதாக தேவபிரசன்னம் பார்த்த ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை அய்யப்பன் கோவிலில், அன்னதான மண்டபம் அமைப்பது குறித்து, தேவபிரசன்னம் மற்றும் ராசி பொருத்தம் பார்க்கும் நிகழ்ச்சி கோவிலின் சன்னதி முன் உள்ள மண்டபத்தில் நடந்தது. கோவில் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில், கடுப்பசேரி பத்மநாப சர்மா தலைமையில், ஜோதிடர்கள் தேவபிரசன்னம் மற்றும் ராசி பொருத்தம் கணித்தனர். அதில், தெரியவந்ததாக ஜோதிடர்கள் கூறியதாவது:

கண்டறிந்த குறைபாடுகள்: கோவிலின் சன்னதி சாஸ்திர முறைப்படி அமைக்கப்படவில்லை. உற்சவ மூர்த்தி சிலையில், சில குறைபாடுகள் இருந்துள்ளன. புதிய மேல்சாந்தி பொறுப்பேற்ற பின், அதை தன் செலவில் சரி செய்துள்ளார். இருப்பினும், குறைபாடுகள் முழுமையாக சரி செய்யப்படவில்லை. அன்னதான மண்டபம் அமைப்பதற்காக, தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் சிறிய மாற்றங்கள் செய்ய வேண்டும். மண்டபம் அமைப்பதற்கு முன், தெய்வத்தின் அதிருப்தியை களைய தேவையான, பரிகாரங்களை மேற்கொண்ட பிறகே பணிகளை துவக்க வேண்டும். அய்யப்பன் கோவில் பழங்காலத்தில் சிறிய அளவில் இருந்தபோது, பூஜைக்காக அளிக்கப்பட்ட அதே அளவு பொருட்கள் தான் கோவில் வளர்ச்சியடைந்த நிலையில், தற்போதும் வழங்கப்படுகின்றன. கோவிலிலும், கோவிலில் நடக்கும் பூஜைகளிலும் ஆசார, அனுஷ்டானங்கள் முறையாகக் கடைபிடிக்கப்படுவதில்லை. இதனால், தெய்வம் அதிருப்தியில் உள்ளது.

குளத்தை மாற்றியது தவறு: அய்யப்பன் கோவில் அருகேயுள்ள மாளிகைப்புறத்தம்மன் கோவிலில், துவங்கிய பணிகள் நிறைவடையாமல் உள்ளன. இதுவும் அம்மனை அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது. பஸ்மக்குளம் ஏற்கனவே இருந்த இடத்திற்கே மாற்றவேண்டும். தற்போதுள்ள இடம் சரியானதல்ல. உரல்குழித் தீர்த்தமும் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கும் பஸ்மகுளத்திற்கும் சம்பந்தமுண்டு. உரல்குழித் தீர்த்தத்தில், பக்தர்களிடம் இருந்து காணிக்கை பெறுவதற்கு பிராமணரை தான் நியமிக்கவேண்டும். கொடி மரத்தில் செய்யப்படவேண்டிய பணிகள் குறித்து அஷ்டமங்கள பிரசன்னம் பார்த்த பிறகு தான் முடிவெடுக்கவேண்டும். ராசி பொருத்தம் பார்த்ததில், ஐந்து ராசிகள் தெய்வத்திற்கு அனுகூலமாகவும், ஒரு ராசி மட்டும் பாதகமாக வந்ததால், பெரிய பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

கோவில் நிர்வாக அதிகாரி சஸ்பெண்ட்: கேரளாவில் கோவில்களில் தேவ பிரசன்னம் நடத்த வேண்டுமானால், கோவில் தந்திரியின் அனுமதிக் கடிதத்துடன், கோவில் செயல் அலுவலரின் பரிந்துரையுடன், சம்பந்தப்பட்ட கோவில் கமிஷனருக்கு விண்ணப்பித்து, முன்னரே அனுமதிபெறவேண்டும், என்பது தான் சட்டம். ஆனால், அதை மீறி சபரிமலை அய்யப்பன் கோவிலில், தேவ பிரசன்னம் நடத்தப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த, கோவில் கமிஷனருக்கு மாநில தேவஸ்வம் துறை அமைச்சர் சிவக்குமார் உத்தரவிட்டார். இந்நிலையில், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அதிகாரிகள் இன்று சபரிமலையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கூட்டத்தின் முடிவில், சபரிமலை கோவில் நிர்வாக அதிகாரி எம்.ராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கோவில் செயல் அலுவலர் சதீஷிடம் விளக்கம் கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !