திருச்செந்தூரில் பங்குனி திருக்கல்யாணம்!
தூத்துக்குடி:பங்குனி உத்திரத்தையொட்டி, திருச்செந்தூரில் நேற்றிரவு சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயில்நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 6 மணியளவில் வள்ளி அம்பாள், தபசுக்காட்சிக்காக, சிவன் கோயிலைச் சேர்ந்தார். மாலை 4 மணியளவில் சாயரட்சை தீபாராதனைக்குப்பின் சுவாமி குமரவிடங்கப்பெருமான், சிவன் கோயில் வந்து, வள்ளி அம்பாளுக்கு காட்சியளித்தார். மாலை 6 மணியளவில், சிவன் கோயில் சந்திப்பில், திருக்கல்யாணத்திற்கு முந்தைய தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, சுவாமி- அம்பாளுக்கு பட்டு சாத்தப்பட்டது. பின்னர், சுவாமி குமரவிடங்கப்பெருமான்- வள்ளி அம்பாளுடன் வீதியுலா வந்து கோயிலைச் சேர்ந்தார். அங்கு, இரவு 9.30 மணியளவில், அவர்களுக்கு திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் மொய் எழுதி, திருமாங்கல்ய பிரசாதம் பெற்றுச்சென்றனர். பங்குனி உத்திரத்தையொட்டி, ஏராளமானோர் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.