உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேண்டுதல் நிறைவேற்றிய மதுரை மீனாட்சி ; அன்னதானம் வழங்கினார் நாராயணசாமி

வேண்டுதல் நிறைவேற்றிய மதுரை மீனாட்சி ; அன்னதானம் வழங்கினார் நாராயணசாமி

மதுரை: கூடங்குளம் பிரச்னை சுமுகமாக முடிந்து விரைவில் துவக்கிட வேண்டும் என மதுரை மீனாட்சியிடம் தாம் வேண்டியிருந்ததாகவும், இதனால் வேண்டுதலை நிறைவேற்றி தந்த சுவாமி சன்னதியில் அன்னதானம் வழங்கியதாகவும் மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

இன்று காலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி வந்தார். இவர் வருவதையொட்டி தயாராக சுடச், சுட வைக்கப்பட்டிருந்த பொங்கலை பக்தர்களுக்கு தாமே முன் நின்று வழங்கினார். நீண்ட வரிசையில் நின்றபடி பக்தர்கள் பெற்று சென்றனர். அன்னதானம் வழங்கிய பின்னர் நிருபர்களிடம் பேசிய நாராயணசாமி: தமிழகத்தில் கூடங்குளம் அணு மின்நிலையம் விரைவில் துவக்க வேண்டும் என்றும், எவ்வித பிரச்னையும் இல்லாமல் முடித்து வைக்க வேண்டும் என்றும் கடந்த முறை மதுரைக்கு வந்திருந்தபோது வேண்டி சென்றேன். மேலும் நல்லபடியாக முடித்து கொடுத்தால் பக்தர்களுக்கு நான் அன்னதானம் வழங்குவதாகவும் வேண்டுதலை மீனாட்சி சுந்தரேஸ்வரரிடம் வைத்து சென்றேன். இது நல்ல படியாக நிறைவேறியிருக்கிறது. விரைவில் திறக்கப்படவுள்ளது. இதனால் சுவாமியை தரிசிக்கவும், அன்னதானம் வழங்கவும் வந்தேன்.
கூடங்குளத்தில் 2 அணு உலைகள் தயார் நிலையில் உள்ளன. முதல் அணு உலையில் 99 சத பணிகள் முடிந்து விட்டது. 2 மாதத்தில் மின்சார உற்பத்தியை துவக்கி விடுவோம். மற்றொன்றில் அடுத்த 2 மாதத்தில் துவக்கப்படும். மொத்தம் உற்றபத்தி செய்யப்படும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழக முதல்வர் மற்றும் கட்சியினரும் கேட்டு வருகின்றனர். இதற்கு பிரதமர் நல்ல முடிவை அறிவிப்பார்.
இலங்கை தமிழர் நல்வாழ்வுக்கென அமைக்கப்பட்ட நல்லிணக்க குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்படாததால், அமெரிக்கா கொண்டு வந்த இலங்கை எதிர் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. தமிழகத்தின் ஒட்டு மொத்த ஆசையை மத்திய அரசு நிறைவேற்றியிருக்கிறது. கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும் பேசி நல்லதொரு முடிவு காணப்படும் இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !