குரு பெயர்ச்சி விழா பணி 40 ஊழியர்கள் நியமனம்
வாலாஜாபாத்: கோவிந்தவாடி குரு பெயர்ச்சி விழாவில், குடிநீர் மற்றும் சுகாதார பணிகளை மேற்கொள்ள, 40 ஊழியர்களை, பி.டி.ஓ., நியமித்துள்ளார். வாலாஜாபாத் ஒன்றியம், கோவிந்தவாடி ஊராட்சியில், குருகோவில் என அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி திருக்கோவில் உள்ளது.
இக்கோவிலில், குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும். நடப்பாண்டு, குரு பெயர்ச்சி விழா, வரும், 29ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு வரும் பக்தர்களுக்காக, குடிநீர் மற்றும் தற்காலிக கழிப்பறை வசதிகளை, வட்டார நிர்வாகம் மேம்படுத்த உள்ளது. இதற்கு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர், ஊராட்சி செயலர்கள், ஊராட்சி துப்புரவு மற்றும் துாய்மை காவலர்கள் என, 40 பணியாளர்களை பி.டி.ஓ., சீனிவாசன் நியமித்துள்ளார். குடிநீர் மற்றும் சுகாதார பணிகளை, இந்த, 40 பேரும் கவனிப்பர் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.கோவிந்தவாடி தட்சிணா மூர்த்தி திருக்கோவில் மற்றும் திம்மராஜம்பேட்டை பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில், 29ம் தேதி, யோக குருவிற்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.அதேபோல், தாங்கி கைலாசநாதர் கோவிலிலும் குருபெயர்ச்சி விழா நடைபெற உள்ளது என, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.