உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திட்டை கோவிலில் குருப்பெயர்ச்சி விழா: குவிந்த பக்தர்கள்

திட்டை கோவிலில் குருப்பெயர்ச்சி விழா: குவிந்த பக்தர்கள்

தஞ்சாவூர், குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசித்தார். இதையடுத்து திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் நடந்த குருப்பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சை அருகே திட்டை என்று அழைக்கப்படும் தென்திட்டையில் வசிஷ்டேஸ்வரர்கோவில் உள்ளது. திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற இந்த கோவில் தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரரர், சுயம்புவாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயரும் கொண்டவர். குருபகவான் ஒரு முழு சுபகிரகம் ஆவார். ஒருவரது ஜாதகத்தில் மிக கடுமையான பாவங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளை கூட தனது பார்வை பலத்தால் காப்பாற்றும் சக்தியாக குருபகவான் விளங்குகிறார். அதனால் தான் குருபார்க்க கோடி நன்மை என்பதும், குருபார்க்க கோடி தோஷம் விலகும் என்பதும் பழமொழிகள் ஆகும். மற்ற எல்லா கோவில்களிலும் சிவபெருமானின் ஞானவடிவான தட்சிணாமூர்த்தியையே குருவாக பாவித்து வழிபடப்படுகிறது.


குருப்பெயர்ச்சி விழா: ஆனால் திட்டை கோவிலில் வசிஷ்டேஸ்வரர், சுகந்தகுந்தளாம்பிகை சன்னதிகளுக்கு நடுவில் எங்கும் இல்லாத சிறப்போடு தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளி பக்தர்களுக்கு குருபகவான் அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆவார். அதன்படி இந்த ஆண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.48 மணிக்கு குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசுராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி குருபகவானுக்கு வெள்ளிகவசம் அணிவிக்கப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.


பக்தர்கள் நெரிசல் இன்றி கோவிலுக்கு செல்லும் வகையில் கட்டைகளால் தடுப்புகளை ஏற்படுத்தி பொது மற்றும் சிறப்பு என 2 வழிகள் வழியாக அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். குருப்பெயர்ச்சி விழாவையொட்டி திட்டை கோவிலில் வருகிற 8ம் தேதி லட்சார்ச்சனையும், 9ம் தேதி முதல் 12 ம் தேதி வரை சிறப்பு பரிகார ஹோமமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு மேற்பார்வையில் உதவி ஆணையர் சிவராம்குமார், செயல் அலுவலர் தனலட்சுமி மற்றும் அதிகாரிகள், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !