உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் கந்தசஷ்டி விழா துவக்கம் மலை ஏறிய கஸ்தூரி யானை

பழநியில் கந்தசஷ்டி விழா துவக்கம் மலை ஏறிய கஸ்தூரி யானை

பழநி: கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, பழநி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள், காப்புக்கட்டி விரதம் துவங்கினர். திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவிலில், நேற்று முதல், நவ., 3ம் தேதி வரை, கந்தசஷ்டி விழா நடக்கிறது.

விழாவின் முதல் நாளான நேற்று, மலைக்கோவிலில், உச்சிக்கால பூஜையில் மூலவர், உற்சவர் சின்னக்குமார சுவாமி, சண்முகர், துவாரபாலகர்கள், மயில், நவவீரர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. அதன்பின், பக்தர்களும் கையில் காப்புக்கட்டி, சஷ்டி விரதம் துவங்கினர். திருஆவினன்குடி மற்றும் பெரியநாயகியம்மன் கோவில்களிலும், முருகரை வழிப்பட்டு, பக்தர்கள் காப்பு கட்டினர். இரவு, தங்கரதப் புறப்பாட்டைக் காண, ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.நவ., 2ல், சூரசம்ஹாரமும்; நவ., 3ல், திருக்கல்யாணமும் நடக்கிறது. பழநி மலைக்கோவிலில் நடைபெறும், ஒரே திருவிழா, கந்தசஷ்டி மட்டுமே. இவ்விழா, நேற்று துவங்கியது. பெரிய நாயகியம்மன் கோவிலில் தங்கியுள்ள, கஸ்துாரி என்ற யானை, கந்தசஷ்டி விழாவிற்கு மட்டுமே, மலைக்கோவிலுக்கு அழைத்து செல்லப்படும்.நேற்று அதிகாலையில், யானைப்பாதை வழியாக, மலைக்கோவிலுக்கு, கஸ்துாரி சென்றது. அங்கு விழா முடியும் வரை, தெற்கு வெளிப்பிரகார மண்டபத்தில் தங்க வைக்கப்படும். பக்தர்கள், யானையை வணங்கி செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !