1000 ஆண்டு பழமையான கோவில்: புதுப்பிக்க வலியுறுத்தல்
மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகேயுள்ள, கடத்துார் கொங்கனேசுவரர் கோவிலை புதுப்பிக்க, இந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சோழமன்னர்கள் ஆட்சி எல்லை கொங்கு மண்டலம் வரை பரவியிருந்தது. இந்த காலகட்டத்தில், அமராவதி ஆற்றங்கரையில் சைவ, வைணவ கோவில்கள் கட்டப்பட்டு, அதனை சார்ந்து புதிய கிராமங்கள் உருவாக்கப்பட்டன. கடத்துார், காரத்தொழுவு, கொமரலிங்கம், கொழுமம் உள்ளிட்ட பல கிராமங்களில் கற்களை மட்டும் பயன்படுத்தி அமைத்த இந்த கோவில்கள் கற்றளி என சிறப்பு பெயரில் அழைக்கப்படுகிறது.
மடத்துக்குளம் தாலுகா கடத்துார் அமராவதி ஆற்றங்கரையில், இந்த கற்றளி முறையில் கொங்கனேசுவரர் கோவில் கட்டப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை தினசரி பூஜைகள் நடந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் வழிபட்டு வந்தனர். ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது, போதிய பராமரிப்பு இன்றி, கட்டடம் சேதமடைந்துள்ளது. பக்கவாட்டு சுவர்களில் கற்கள் விழுந்து விட்டன. சுற்றுச்சுவர் இல்லாததால், சிலைகள் திறந்த வெளியில் உள்ளன. கருவறையில் லிங்கம் மட்டும் உள்ளது. சில சிலைகள் உடைந்து காணப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளை கடந்தும், முன்னோர்களின் அடையாளமாக உள்ள கொங்கனேசுவரர் கோவில் பரிதாபமாக காணப்படுகிறது.கோவிலை சுற்றி சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். குறுகிய பாதை வழியாக தான் செல்ல முடியும். மன்னர் ஆட்சி முறை, தானங்கள், பூஜைகள் குறித்து கல்வெட்டுக்கள் சிதிலமடைந்துள்ளன. சிறப்பு மிக்க கோவிலை புதுப்பிக்க இந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.