உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாணியடிக்கும் திருவிழா: தாளவாடியில் வினோதம்

சாணியடிக்கும் திருவிழா: தாளவாடியில் வினோதம்

சத்தியமங்கலம்: தாளவாடி மலைப் பகுதியில்  ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் வினோத திருவிழா நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டம்  தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில்  300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு  ஆண்டுதோறும்  தீபாவளி பண்டிகை முடிந்ததும்  சாணியடிக்கும் திருவிழா நடப்பது வழக்கம்.

நேற்று காலை  11:00 மணியளவில்  கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. ஊரில் அனைத்து வீடுகளிலும் இருந்த மாட்டு தொழுவங்களில்  பசுமாட்டு சாணம் சேகரிக்கப்பட்டு  கோவில் பின்புறம் உள்ள இடத்தில் மலை போல் குவிக்கப்பட்டது. பகல்  2:00 மணியளவில் கோவில் அருகே உள்ள குளத்தில் இருந்து  தாரை  தப்பட்டை அடித்தபடி  பல்வேறு வேடங்களில் வந்த பக்தர்கள்  கழுதை மேல் ஒருவரை அமர வைத்து  கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின்  கிராமத்தில் உள்ள சிறுவர்,  இளைஞர்கள்  100க்கும் மேற்பட்டோர்  கோவிலுக்கு பின்புறம் கொட்டி வைத்திருந்த சாணத்தை உருண்டைகளாக செய்து  ஒருவர் மீது ஒருவர் வீசி கொண்டனர். இந்த வினோத சாணியடிக்கும் விளையாட்டு  3:00 மணிக்கு துவங்கி  ஒரு மணி நேரம் நடந்தது. இதையடுத்து  அனைவரும் குளத்தில் நீராடி  கோவிலுக்கு சென்று  பீரேஸ்வரரை வழிபட்டனர்.  விழா முடிந்தவுடன்  சாணத்தை  விவசாய நிலத்தில் போட்டனர். இதன் மூலம் விவசாயம் செழிக்கும் என  கிராம மக்கள் நம்புகின்றனர்.  தாளவாடி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள்  சுற்றுலா பயணியர் என  ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !