உள்ளூர் செய்திகள்

ஆர்வமா... கோளாறா...

ஜோசப் என்ற மர வியாபாரிக்கு ஒரே மகன் டேனியல். படிப்பு வராததால் அவனை வியாபாரத்தில் ஈடுபடுத்தினார். அவர்களின் கடையில் சாதாரண மரக்கட்டைகளுடன் விலை உயர்ந்த சந்தன கட்டைகளும் விற்பனைக்கு இருந்தன. மகன் தொழிலுக்கு வந்த பிறகு விற்பனை அமோகமாக இருந்தது. லாபம் பெருக ஆரம்பித்தது. இந்நிலையில் ஒருநாள் நண்பரைக் காண வெளியூருக்குச் சென்றார் வியாபாரி. அந்த நேரத்தில் விற்காமல் இருந்த சந்தனக் கட்டைகளை எல்லாம் குறைந்த விலைக்கு விற்றான் டேனியல். புத்திசாலித்தனமாகத் விற்று விட்டதாகவும் மனதிற்குள் மகிழ்ந்தான். வெளியூரில் இருந்து தந்தை வந்தார்.முதல் வேலையாக தன்னைப் பற்றி பெருமையாகச் சொன்னான். ''முட்டாளே... சந்தன மரத்தின் வாசனை ஒருநாளும் கெடாது. நல்ல விலைக்கு போக வேண்டிய பொருளை நஷ்டத்திற்கு கொடுத்து விட்டாயே'' என திட்டினார் வியாபாரி. ஆர்வம் தேவையான ஒன்று. அதுவே ஆர்வக் கோளாறாகி விட்டால் விபரீதமாகி விடும்.