உள்ளூர் செய்திகள்

சொல்லாமலே நான் பார்த்தது!

இரவை ஒளியால் நிரப்பி வெளிச்சத்தை கொடுத்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். இவர் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது ஆசிரியர் கடிதம் ஒன்றை கொடுத்து, இதை உனது அம்மாவிடம் கொடு என்றார். அவரும் அம்மாவிடம் கொடுக்கவே, அதை வாங்கி படித்தவர் அழுதுவிட்டார். ''கடிதத்தில் என்னம்மா.. எழுதியிருந்தது. ஏன் அழுகிறீர்கள்'' எனக்கேட்டார் எடிசன். ''உங்கள் மகன் புத்திசாலி. அவனின் அறிவுக்கு ஏற்றளவில் இந்தப் பள்ளி இல்லை. எனவே வீட்டில் இருந்தே அவனை படிக்க வையுங்கள்'' என்று சொல்லி எடிசனை அணைத்துக் கொண்டார். இதைக்கேட்டவர் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார். ஆண்டுகள் வேகமாக கடந்தன. அம்மா இறந்து போனார். உலகமே போற்றும் மகத்தான விஞ்ஞானியாக திகழ்ந்தார் எடிசன். ஒருநாள் அவர் ஏதோ தேடிக்கொண்டிருக்கும்போது, சிறு வயதில் ஆசிரியர் கொடுத்த கடிதத்தை பார்க்க நேர்ந்தது. அதை படித்தவர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அம்மா சொன்னது வேறு. தான் பார்த்தது வேறு. 'உங்கள் மகனின் மனநிலை சரியில்லாததால், பள்ளியில் படிப்பதை அனுமதிக்க முடியாது' என அதில் எழுதியிருந்தது. இதை படித்தவர் உறைந்துபோய் விட்டார். இது சிறு வயதிலேயே தெரிந்திருந்தால் என்னால் ஒன்றுமே செய்திருக்க முடியாதே என எண்ணி அழுதார். அதிலிருந்து மீள்வதே பெரிய விஷயமாக இருந்தது. தன் முயற்சியை பாராட்டி ஊக்கம் அளித்த அம்மாவை நன்றியோடு நினைத்துக் கொண்டார்.ஒருவர் தன்னை பற்றிய விஷயங்களை தெரிந்து கொண்டால்தான் வாழ்வில் முன்னேறுவர் என பலர் கூறுவர். ஆனால் சில நேரங்களில், சில விஷயங்கள் தெரியாமல் இருப்பதே நல்லது.