உத்தமனாய் வாழ்வோம்!
இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் அவதரித்து ஊழியம் செய்த போது 38 உவமைக் கதைகள் மூலம் அறிவுரை வழங்கினார்.ஒரு உவமைக் கதையில், ''ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி, தோட்டக்காரர்களுக்கு அதை குத்தகையாக விட்டு வெளிநாட்டிற்குப் போயிருந்தார்,'' என்று சொல்கிறார்.ஆண்டவர் இந்த உலகத்தைப் படைத்த போது மனிதன் வாழ்வதற்கு ஏற்றவாறு மலைகளையும், சமுத்திரங்களையும், ஆறுகளையும், அதில் பல்வேறு உயிரினங்களையும், பறவைகள், விலங்குகள் அனைத்தையும் படைத்தார். ஒவ்வொன்றுக்கும் தன் நிலையில் இருக்கும்படி அவற்றிற்கு எல்லையும் உண்டாக்கினார். மலையில் வாழும் உயிரினங்கள் பாலை வனத்திற்கும், பாலைவனத்தில் வாழ்பவை மலைக்கும் செல்வதில்லை. அதுபோல, ஆற்றுமீன்கள் கடலிலோ, கடல்மீன்கள் ஆற்றிலோ ஜீவிப்பதில்லை. ஆனால், மனிதன் மட்டும் தனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடு கட்டி குடிஇருக்க, விவசாயம், தொழில்கள் செய்து ஜீவிக்க இயற்கையாகவே கடவுள் வேலியடைத்து, நம்மிடத்தில் விட்டிருக்கிறார். நாம் எப்படி இருக்கிறோம்? இந்த உலகில் வாழ்வதற்காக குத்தகைதாரராக வந்திருக்கிறோம். உலகில் இருந்து எதையும் நம்மால் எடுத்துச் செல்ல முடியாது. கடவுள் இந்த உலகைச் செம்மைப்படுத்த அநேக தீர்க்கதரிசிகளையும், போதகர்களையும் அனுப்பினார். வந்தவர்கள் அனைவரையும், வாழ்ந்தவர்கள் அடித்துக் கொன்று விட்டு நிமிர்ந்து கொண்டார்கள். நல்லவர்களால் திருத்த முடியாத போது, ''கடவுள் தன் ஒரே பேறான குமாரனாகிய இயேசுவைத் தந்தருளி, என் குமாரனுக்காகவாவது அவர்கள் அஞ்சுவார்கள் என்று அனுப்பினார். ஆனால் நடந்தது என்ன? அவரையும் சிலுவையில் அறைந்து விட்டனர். வேதம் இவ்வாறு சொல்கிறது,''திராட்சை தோட்டத்து எஜமான் .... அந்த கொடியரை கொடுமையாய் அழித்து (மத்தேயு 21:40,41) வேறு ஒருவனுக்கு திராட்சைத் தோட்டத்தைக் கொடுப்பார் என்றார்''. நம்மால் இந்த உலகத்தின் இயற்கை வளத்தை காப்பாற்ற முடியாமல் போனால், நம் இடம் வேறு ஒருவருக்குக் கொடுக்கப்படும். வேறு சந்ததிக்கு இந்த உலகத்தை ஆண்டவர் கொடுத்து விடுவார் என்பதில் சந்தேகமில்லை. எனவே, உத்தமமான மனிதனாக உலகத்தை அதன் இயற்கை வளத்தைப் பாதுகாத்து வருங்கால சந்ததி வளமோடு வாழ துணை நிற்போம்.