அன்பு என்பது தெய்வமானது!
1977 ஜுன் மாதம், லண்டனில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அன்னை தெரசா ஒரு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.அந்த அனுபவத்தைக் கேட்போமா!''கடவுள் மறுப்பாளர் ஒருவர், அன்னை தெரசாவின் இல்லத்திற்கு ஒருமுறை வந்தார். அப்போது, தெருவிலுள்ள சாக்கடையில் விழுந்து, இறக்கும் தருணத்தில் இருந்த ஒருவரை, அந்த இல்லத்தைச் சேர்ந்த அருள்சகோதரி தூக்கி வந்திருந்தார். அந்த மனிதரின் உடம்பெல்லாம் புழுக்கள் பற்றியிருந்தது. அந்த அருள்சகோதரி அவரைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார். அப்போது, நாத்திகர் ஒருவர் அன்னையின் இல்லத்தைக் காண வந்திருந்தார். அவர், அந்த சகோதரியின் சேவையைக் கவனித்துக் கொண்டே இருந்தார்.இவர் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அந்த அருள்சகோதரி பார்க்கவில்லை. கொஞ்சம் கூட அருவருப்பு கொள்ளாமல், மிகுந்த கனிவோடும், புன்சிரிப்போடும், அன்போடும் அவரைச் சுத்தப்படுத்தியதைக் கவனித்தார் நாத்திகர். பிறகு அவர் அன்னை தெரசாவினிடத்தில் வந்தார்.''நான் கடவுள் மீது நம்பிக்கையற்றவனாகவும், பகைமை நிறைந்த உள்ளத்தோடும் இங்கே வந்தேன். ஆனால், இப்போது கடவுள் மீது நம்பிக்கை நிறைந்தவனாகச் செல்கிறேன். அந்த அருள் சகோதரியின் கரங்களால், பரிதாப நிலையில் இருந்த அந்த மனிதருக்கு, மிகுந்த கனிவோடு செய்யப்பட்ட சேவையைப் பார்த்தேன். சுருக்கமாகச் சொன்னால், அன்பு என்பது வெறும் வார்த்தையல்ல. செயல்படுகிற அன்பை நான் கண்டேன். இதைக் கண்ட பின் கடவுளுடைய அன்பு என்னில் இறங்குவதை உணர்ந்தேன். நான் இப்பொழுது கடவுளை முற்றிலுமாக நம்புகிறேன்,'' என்று சொல்லிச் சென்றார்.அவர் யார் என்று தெரசா அம்மையாருக்கு தெரியாது. ஆனால், நாத்திகராக வந்த ஒருவர், கடவுளை அறிந்து கொண்டு நம்பிக்கை நிறைந்தவராகச் சென்றதை எண்ணி மனம் மகிழ்ந்தார்.''என் பிள்ளைகளே! வானத்திலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்பு கூரக்கடவோம்'' என்ற பைபிள் வசனம் இங்கே நினைவு கூரத்தக்கது.