தியாக உள்ளம் வேண்டும்
டென்மார்க் நாட்டை ஆண்ட அரசர் ஒருவரை எதிர்த்து அங்குள்ள ராணுவத்தளபதி ஒருவர் புரட்சி செய்தார். தாய்நாட்டின் கொடியை இறக்கிவிட்டு, புரட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். அரசருக்கு கடும் கோபம் ஏற்பட்டது. அவர் கொடி ஏற்றப்பட்ட இடத்திற்குச் சென்றார். புரட்சித்தளபதி உயரமான ஒரு இடத்தில் நின்றபடி, மக்களிடையே புரட்சிக்கான காரணம் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது ராஜா உரக்கக் கத்தினார். ''உடனடியாக கொடியை இறக்கிவிட்டு, கீழே இறங்கி வா! இல்லாவிட்டால் நான் அனுப்பும் போர் வீரன் மேலே வந்து, அதனை அவிழ்ப்பான்,'' என்று எச்சரித்தார். புரட்சித்தளபதி அதற்கு பயப்படவில்லை. ''நீங்கள் போர் வீரனை அனுப்பினால், அவனை நான் சுட்டுக் கொன்றுவிடுவேன். உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள்,'' என்றார். ராஜா சற்றும் தயங்கவில்லை. ''தளபதியே! அப்படி அனுப்பப் போகும் போர் வீரன் வேறு யாருமல்ல. நானே மேலே ஏறிவரப்போகிறேன். என்னை வேண்டுமானால் சுடு! உன்னைப் போன்ற தீவிரவாதிகளுக்குப் பயப்படுவதைவிட, ஆட்சிப்பொறுப்பையும், உயிரையும் இழப்பதே மேல்,'' என்று வீரம் பொங்க பேசினார். இதுகேட்டு தளபதி மனம் திருந்திவிட்டான். இந்த சம்பவத்தில் வரும் நிகழ்வைப் போல, சாத்தானின் கொடியை இறக்க கர்த்தர் தன் தேவதூதரை அனுப்பாமல், தானே மனுஷராக இறங்கி வந்தார். கல்வாரிச் சிலுவையில் பாடுபட்டு விடுதலைக் கொடியை ஏற்றி வைத்தார். அதுபோன்ற தியாக உள்ளம் அனைவருக்கும் வரவேண்டும்.''இதோ, ஜாதிகளுக்கு நேராக என் கரத்தை உயர்த்தி, ஜனங்களுக்கு நேராக என் கொடியை ஏற்றுவேன்,'' என்று பைபிளில் கர்த்தர் சொல்கிறார்.