திரும்பத் திரும்பத் தவறு செய்யலாமா?
ஒரு ராஜா சிலருக்கு கடன் கொடுத்திருந்தார். ஒருநாள், கடன் வாங்கியவர்கள் பட்டியலைப் பார்த்தார். பத்தாயிரம் தாலந்து, கடன்பட்ட ஒருவனை ராஜா முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவன் கடனைத் திருப்பி செலுத்த வழியற்ற நிலையில் இருந்தான். அவனுக்குரிய அனைத்தையும் விற்று கடனைத் தீர்க்கும்படி கட்டளையிட்டார்.கடன்பட்டவன் ராஜாவின் காலில் விழுந்து வணங்கி தன் மீது இரக்கம் காட்டும்படி கெஞ்சினான். ராஜாவும் மனம் இரங்கி, அவனது கடனை ரத்து செய்து விடுதலை செய்தார். அவ்வாறு மன்னிப்பு பெற்றவன், தன்னிடம் 100 வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்த வேலைக்காரன் ஒருவனை அழைத்தான். அவன் கழுத்தை நெரித்து, ''இப்போதே நீ பட்ட கடனைத் தீர்க்க வேண்டும்,'' என்று நிர்ப்பந்தம் செய்தான்.வேலைக்காரனும் அவன் காலில் விழுந்து, தன் மீது இரக்கம்காட்டும்படி மன்றாடினான். அவன் அதற்கு சம்மதிக்கவில்லை. அவன் மீது புகார் செய்து சிறையில் போட வைத்தான். இந்த விஷயம் ராஜாவின் காதை எட்டியது.அவர் அவனை திரும்ப அழைத்து, ''நீ பட்ட கடன் முழுவதையும் விலக்கி மன்னித்தேன். நான் உனக்கு இரங்கினது போல, நீயும் உன் வேலைக்காரனுக்கு இரங்க வேண்டாமோ'' என்று சொல்லி, கொடுத்த மன்னிப்பை ரத்து செய்தார். கடனைச் செலுத்தி தீர்க்கும்வரை அவனை உபாதிக்கிறவனிடத்தில் (தண்டனை தருபவன்) ஒப்புவித்தார்.''மன்னிப்பை பெற்றவன் தன் நடக்கை காரணமாக அதை இழந்து போனான். ''நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற் போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்'' என்கிறது பைபிள் வசனம் (மத்18:35). இயேசுவும் நம் மீது இரங்கி, நம் பாவங்களை ஏற்றார். ஆனால், திரும்பத்திரும்ப நாம் பல தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறோம். திருந்துவதற்குரிய வழியை பார்க்காவிட்டால், தண்டனையை நாமே வருவித்துக் கொள்வது போலத்தான்!