உள்ளூர் செய்திகள்

தியாகம் நமது கடமை

ஒருசமயம் கடலில் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்று மூழ்கும் நிலையில் இருந்தது. பயணிகள் தப்பிப்பதற்கு அக்கப்பலில் குறைந்த படகுகளே இருந்தன. எனவே பயணிகளின் பெயரை எழுதிப்போட்டு, தப்பிக்க வேண்டிய நபர்களை தேர்ந்தெடுத்தார் கேப்டன். அப்போது உயிர் மீது ஆசை கொண்ட ஒருவர், 'யாராவது என்னைக் காப்பாற்ற மாட்டீர்களா?'' என அலறினார். அதைக்கேட்ட ஒரு தேவஊழியர் அவரிடம், 'என் படகை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். நான் மரணத்திற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் செய்த பாவத்திற்கு இயேசுவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டும். இயேசுவின் அன்பின் நிமித்தமாக நான் இதைச் செய்கிறேன்,'' என்றார். அந்த நபரும் ஒப்புக்கொள்ளவே, தேவ ஊழியர் கடலில் மூழ்கி இறந்தார். தப்பிய நபர் இயேசுவை ஜெபித்து தன் பாவங்களுக்கு மன்னிப்பு பெற்றார். அவர் இந்நிகழ்ச்சியை தன் குடும்பத்தாரிடம் கூறும்போது, 'எனக்காக இரண்டு பேர் மரித்தார்கள்,'' என்றார். அவர் கூறிய மற்றொருவர் அவரது பாவத்திற்காக மரித்த இயேசுகிறிஸ்து. ஆம்! தன்னை விசுவாசத்துடன் வணங்கும் அனைவரின் பாவங்களையும் இயேசு கிறிஸ்து நீக்குகிறார். பைபிளில் 'சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும் மேன்மை பாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது,'' என ஒரு வசனம் இருக்கிறது. 'ஒருவர் செய்யும் தியாகம் பெருமை அடித்துக்கொள்வதற்காக செய்வது அல்ல. அது அவருக்காக விதிக்கப்பட்ட கடமைகளில் ஒன்று' என்பது இதன் பொருள்.ஒருவர் மற்றொருவர் மீது இரக்கம் கொண்டு அவருக்காக உயிரைக் கொடுப்பது அரிது. ஆனால் இயேசு கிறிஸ்து பாவம் செய்த ஒவ்வொருவருக்காகவும் மரித்தார். இதனை 'நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்'' என்ற பைபிள் வசனம் விளக்குகிறது.