கேள்வி பிறந்தது இன்று!
வாழ்க்கையில் சிலர் வெற்றியும், பலர் தோல்வியும் பெறுவதுண்டு. இது அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது என்று பலரும் நினைக்கின்றனர். இப்படி நினைப்பவரா நீங்கள்.. உங்களது எண்ணத்தை மாற்றிக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தவர் ஜான் எஃப் கென்னடி. இவர் வெள்ளை மாளிகையில் நாள்தோறும் பார்வையாளர்களை சந்தித்து பேசும் பழக்கத்தை கொண்டிருந்தார். ஒருநாள் அவரை பார்க்க மாணவர்கள் வந்திருந்தனர். அதில் பளிச்சென்ற முகத்துடன் சிரித்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவனை அழைத்தார் கென்னடி. ''உன்னை பார்த்தால் மிகவும் புத்திசாலியாக தெரிகிறாய். உன் எதிர்கால லட்சியம் என்ன'' என்று கேட்டார். ''இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் நாளை நான் இருக்க வேண்டும். அதாவது ஜனாதிபதியாவதே எனது லட்சியம்'' என தைரியமாக சொன்னான். மாணவனின் தீர்க்கமான பதிலை கேட்டு ஆச்சர்யப்பட்ட கென்னடி அவனை வாழ்த்தி அனுப்பினார். இந்த இடத்தில்தான் பலரும் தவறு செய்கிறோம். லட்சியத்தை மனதிற்குள் பூட்டி வைத்துவிடுகிறோம். சிலர் மட்டுமே அதை வெளியே உலாவவிடுகின்றனர். அந்த மாணவனும் கம்பீரமாக உலா வந்தான். புரியவில்லையா.. அவன் சொன்ன லட்சியத்தை அடைந்தான். அவன் வேறுயாருமல்ல. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன். அவரது எண்ணம் வெறும் ஆசையோ, கற்பனையோ அல்ல. தீர்க்கமான தீர்மானம். அதனால் அது நடந்துவிட்டது. இப்போது நாம் இருக்கும் நிலை என்ன... அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி மனதில் பிறந்துவிட்டாலே நீங்களும் வெற்றியாளர்தான். என்ன இந்தக்கேள்வி உங்கள் மனதில் சிறகடித்து வட்டமிடத்தொடங்கிவிட்டதா...