பாரதியாரின் ஆத்திசூடி - 22
பாட்டினில் அன்பு செய் இந்தியாவிலுள்ள இசை வடிவங்கள் பழமையான வரலாறு கொண்டவை. கிராமிய, உள்ளூர் இசை மரபுகள், அந்தந்த பிரதேசத்துச் சமூக, பொருளாதார, ஆன்மிகத் தேவைகளோடு இணைந்தே வந்திருக்கின்றன. இந்திய மரபில் கர்நாடக, ஹிந்துஸ்தானி, கஸல், காவாலி, கிராமிய, நாட்டுப்புற இசை என பல இருக்கின்றன. இசை தொடர்பான விஷயங்களே காணொளியில் அதிகம் இருக்கிறது என்றால் மனித வாழ்வுடன் ஒன்றிய விஷயம் பாட்டு என்பது புரியும். தெய்வங்களுடன் இசைக்கருவியும், பாட்டும் இணைந்தே இருக்கிறது என்பதால் கண்ணனின் புல்லாங்குழல், சரஸ்வதியின் வீணை, சிவனின் உடுக்கை, நந்தியின் மத்தளம், நாரதரின் தும்புரு என இசையின் வடிவங்களாக தெய்வங்களைப் போற்றுகிறோம்.பிறப்பு முதல் இறப்பு வரை அதாவது தாலாட்டில் தொடங்கும் மனித வாழ்க்கை ஒப்பாரியில் முடிவடைகிறது. பாட்டு என்பது ரசிப்பையும், மகிழ்ச்சியையும் தருவதுடன், கவலை, வேலையின் களைப்பை போக்குகிறது. ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பு இருக்காது என்பது நம் வாழ்வின் அங்கமாகி விட்டது. இதைத் தவிர கோலாட்டம், நலுங்குப் பாட்டு, நடனப் பாட்டு, கோயில் பாட்டு, கச்சேரிகள், கூத்துப் பாடல்கள், காதல் பாடல்கள் என பாட்டில் பல வகை உள்ளன. இசையால் வசமாகாத இதயமில்லை, இசை என்றால் நம்மை இசைய வைப்பது மற்றும் ஒழுங்கு செய்யப்பட்ட அழகு ஒலி என பொருள். ஒரே ஓசையை திரும்பத் திரும்ப உச்சரிப்பதால் எழும்பும் அதிர்வு மனித உடலை குறிப்பிட்ட லயத்திற்கு வயப்படுத்துவதால் மந்திரங்களே இசையின் தொடக்கமாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தங்கள் படைப்புகளில் அன்புடன் கடவுளைப் பாடிப் பரவசப்பட்டதால் தான் அவை காலம் கடந்தும் நிற்கிறது. 'ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே' என சிவனை வணங்குகிறது தேவாரம்.கடவுளை வழிபட்ட அடியவர்கள் யாவரும் அன்பால் உருகிப் பாடி இருக்கிறார்கள். இசையும் அன்பும் பிரிக்க முடியாதது. இசையும், அன்பும் இருக்கும் இதயம் ஈரமுள்ளதாக இருக்கும். இசை ஒருவனை இசைய வைத்து விடும். அதனால் தான் பாரதியார், 'பாட்டினில் அன்பு செய்' என்கிறார் புதிய ஆத்திசூடியில். கடவுளைப் பாடிய சைவ, வைணவ அடியார்கள், சங்கீத மும்மூர்த்திகள், தேவாரம் பாடிய தமிழ் மூவர், கம்பன், அருணகிரிநாதர் தாயுமானவர், குமரகுருபரர் என பலரும் கடவுளை அன்பின் வடிவமாகவே கருதி பாடினர். மகாகவி பாரதியாரின் பக்திப் பாடல்களில் முதல் பாடல் விநாயகர் நான்மணிமாலை. பவளம், முத்து, பச்சை, நீலம் ஆகிய மணிகளைக் கோர்த்து மாலையாக்கினால் எப்படி இருக்குமோ அது போல, வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் ஆகிய யாப்புக் கவிதைகள் ஒழுங்காக அமைத்து பாடப்பெறுவது நான்மணி மாலை. இப்பாடலில் இவை 10 முறை பயின்று வருகின்றன. அது மட்டுமல்ல, முதல் பாவின் ஈற்றடி சொல்லை வரும் பாவின் முதலடிச் சொல்லாக அந்தாதியாக்கி இருப்பதும் சிறப்பு.பாரதியாரின் இலக்கியப் புலமைக்கும், இலக்கணத் தேர்ச்சிக்கும் அடையாளமாக திகழ்பவை இந்தக் கவிதைகள். அது மட்டுமல்ல... தேசப்பற்றையும் இதில் காணலாம். பகவத் கீதையில் கண்ட மெய் ஞானத்திற்கு வடிவம் கொடுக்க நினைத்து உருவாக்கிய இலக்கியமே விநாயகர் நான்மணிமாலை. அற்புதமான இந்த படைப்பில், விண்டுரை செய்குவன் கேளாய் புதுவை விநாயகனே!தொண்டுன தன்னை பராசக்திக் கென்றும் தொடர்ந்திடுவேன்;பண்டைச் சிறுமைகள் போக்கி, என்னாவிற் பழுத்தசுவைத்தெண்டமிழ்ப்பாடல் ஒருகோடி மேவிடச் செய்குவையே. எனப் பாடுகிறார். அன்றாட வாழ்வு, தேசம் என எல்லாவற்றிலும் அன்பையே பாடல்கள் ஆக்குகிறார். வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு; பூணும் வடம் நீ யெனக்கு, புது வைரம் நானுனக்கு; காணுமிடந்தோறு நின்றன் கண்ணினொளி வீசுதடீ மாணுடைய பேரரசே! வாழ்வு நிலையே கண்ணம்மா!என பாரதி இனிய தாம்பத்யத்தில் அன்பை விதைக்கிறார். பாட்டுகளின் கருத்துக்கள் மனிதனுக்கு அறிவை ஊட்டுகின்றன; கவலையை மறக்க வைக்கின்றன. மனிதன் அன்றாட உழைப்பை முடித்தவுடன் ஓய்வும் நிம்மதியும் தேவைப்படுகிறது. அது மறுநாள் உழைப்பிற்கு தயார்படுத்துகிறது; அதற்கு இசை, கலை, இலக்கியம், பாட்டு அவசியம். பாரதியார் விரும்புவது இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழை அன்பால் போற்றி வளர்க்க வேண்டும் என்பதே. அன்பிற் சிறந்த தவமில்லை! அன்புடையார் இன்புற்று வாழ்தலியல்பு அன்பே தவம் என்றும் அந்த தவத்தைச் செய்தால் நம் முயற்சியில் வெற்றி கிடைக்கும் என்கிறார் பாரதியார். யாகத்திலே, தவவேகத்திலே தனி யோகத்திலே பல போகத்திலே ஆகத்திலே பல பக்தி கொண்டார் தம் அருளினிலே உயர்நாடு' என பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்னும் பாடலில் கூறுகிறார்.அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்புன்கணீர் பூசல் தரும்.அன்பிற்கும் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ் உளதோ? தம்மால் அன்பு செய்யப்பட்டாரின் துன்பம் கண்டு அன்புடையார் விடும் கண்ணீரே அன்பை அறிய வைக்கும் என்கிறார் திருவள்ளுவர். அன்பே சிவம் என்கிறார் திருமூலர். வள்ளலாரின் அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை என்னும் மந்திரம் அன்பின் வெளிப்பாடே. அன்பு எனும் பிடியுள் அகப்படும் மலையே!அன்பு எனும் குடில்புகும் அரசே!அன்பு எனும் வலைக்குள் படுபரம் பொருளே!அன்பு எனும் கரத்து அமர் அமுதே!அன்பு எனும் கடத்துள் அடங்கிடும் கடலே!அன்பு எனும் உயிர் ஒளிர் அறிவே!அன்பு எனும் அணுவுள் அமைந்த பேரொளியே!அன்பு உருவாம் பரசிவமேஅன்பு எனும் பிடியால் கடவுளைக் கட்டிப் போட முடியும் என்கிறார் வள்ளலார். அன்பு என்ற ஒற்றைச் சொல்லுக்குப் பின்னால், மலையில் இருந்து அணு வரை பல வடிவங்கள் உண்டு என விளக்கப்படுகிறது. அன்பு எனும் குடிலில் புகும் அரசன், அன்பு எனும் வலையில் படும் பரம்பொருள், அன்பு எனும் குடத்துள் அடங்கும் கடல், அன்பு எனும் உயிர் ஒளிரும்அறிவு, அன்பு எனும் அணுவில் அமைந்த பேரொளி என பல்வேறு விதமாக அன்பின் ஆற்றலை விவரிக்கிறது. இந்த அன்பே உருவமாகி, பரசிவம் என்ற கடவுளின் வடிவம் என்கிறது திருவருட்பா. கடவுளை அன்பு, ஆன்ம நேயத்துடன் அணுகுவதன் மூலம் அருளைப் பெறலாம் என்கிறது. உலகில் வாழ்வதற்கு ஒரே ஒரு ஆயுதம் உள்ளது என்றால் அது அன்பு என்னும் ஆயுதம்தான். அன்பு ஒன்றே அனைவரையும் இணைய வைக்கும் - இணைக்க வைக்கும். அதனால் தான் அந்த அன்பை பாப்பா பாட்டில்அன்பு மிகுந்த தெய்வமுண்டு துன்பம்அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!என்கிறார் பாரதியார். -ஆத்திசூடி தொடரும்முனைவர் தென்காசி கணேசன்94447 94010