உள்ளூர் செய்திகள்

தெய்வத் திருமணம் - 4

சூரியன் - உஷாதேவி திருமணம்காஸ்யப முனிவரின் பதின்மூன்று மனைவிகளில் முதல் மனைவியான அதிதி கருவுற்றிருந்த போதும், கணவருக்குச் செய்ய வேண்டிய பணிவிடையை எப்போதும் போல் செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு கணவர் மீதுள்ள அன்பைச் சோதிக்க தர்மதேவதை விரும்பினாள். ஒருநாள் காஸ்யப முனிவருக்கு அதிதி உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். அங்கு பிச்சைக்காரர் வடிவில் தோன்றினாள் தர்ம தேவதை. கணவருக்கு உணவு பரிமாறி முடித்து பின்னர், பிச்சை இட உணவுடன் வீட்டுக்கு வெளியில் வந்தாள் அதிதி. கணவருக்குப் பணிவிடை செய்ததாலும், கர்ப்பிணியாக இருப்பதாலும் உடனடியாகப் பிச்சையிட வர முடியவில்லை எனச் சொல்லி மன்னிப்பு கேட்டாள். அதைக் கேட்டுக் கோபமடைந்த தர்மதேவதை உணவை வாங்க மறுத்து, “உன் கணவனும், உன் வயிற்றில் இருக்கும் கருவும் முக்கியம் எனக் கருதி பசியுடன் வந்த என்னை அலட்சியப்படுத்தி விட்டாய். உன் வயிற்றில் இருக்கும் கரு அழியட்டும்” எனச் சாபமிட்டு மறைந்தாள். அதைக் கேட்ட அதிதி மயங்கி விழுந்தாள். காஸ்யப முனிவர் என்ன நடந்தது என்பதை தவசக்தியால் அறிந்து கொண்டார். மனைவியின் மயக்கத்தைத் தெளிவித்த அவர், “அதிதி... உன்னிடம் பிச்சை கேட்டு வந்தவர் தர்மதேவதை. அவரின் சாபத்தால் கரு கலைந்து போனாலும், ஒளிமயமான ஒருவன் உனக்கு மகனாக பிறப்பான்'' என வாழ்த்து சொல்லி கவலையைப் போக்கினார்.பின்னாளில் அதிதியின் வயிற்றில் இருந்து வெளியேறிய கரு பெரும் அண்டவெளியாக மாறியது. அதிலிருந்து ஒளிமயமான பன்னிரண்டு குழந்தைகள் தோன்றினர். அவர்கள் அனைவரும் இணைந்து ஒரே குழந்தையாக மாறிச் சூரியனாக உருவெடுத்து ஆயிரம் கதிர்களுடன் உலா வந்தனர். அதனைக் கண்டு அதிதி மகிழ்ச்சி அடைந்தாள். சூரியனும் வளர்ந்து பெரியவன் ஆனான். இந்நிலையில் தேவதச்சன் எனப்படும் விஸ்வகர்மா, தன் மகள் உஷாதேவிக்குத் (ஸரேணு, ராக்ஞீ, ஸமுக்ஞா, பிரபாஸா, சுவர்க்கலாதேவி என வேறு பெயர்களும் உண்டு) திருமணம் செய்வதற்காக மணமகனைத் தேடிக் கொண்டிருந்தார். இதையறிந்த சூரியனின் பெற்றோர், விஸ்வகர்மாவைச் சந்தித்துத் தங்களின் மகன் சூரியனுக்கு உஷாதேவியைத் திருமணம் செய்து தரும்படிவேண்டினர்.சூரியனின் ஒளி மிகுந்த அழகை கண்டு மகிழ்ந்த விஸ்வகர்மாவும் அதற்கு சம்மதித்தார். இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் சூரியன் - உஷாதேவி திருமணம் சிறப்பாக நடந்தது. அவர்களது இல்லற வாழ்க்கையின் பயனாக முதலில் சிராத்ததேவன் என்ற மகனும், அடுத்து யமன் என்ற மகனும், யமுனை என்ற மகளும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தனர். இந்நிலையில் சூரியனுடைய ஒளியும், வெப்பமும் அதிகரித்துக் கொண்டே இருந்தன. உஷாதேவி அந்த வெப்பத்தைத் தாங்க முடியாமல் துன்பமடைந்தாள். அவள் தன் தந்தை விஸ்வகர்மாவைச் சந்தித்துச் சூரியனின் வெப்பத்தால் ஏற்படும் துன்பத்தைச் சொல்லி வருந்தினாள். பிறந்த வீட்டுக்கே வரப் போவதாகவும் தெரிவித்தாள். விஸ்வகர்மாவோ, கணவர் வீட்டில் எவ்வளவு துன்பமிருந்தாலும், அதை பொறுத்துக் கொள்வது தான் பெண்ணிற்குப் பெருமை என்றும், அடிக்கடி பிறந்த வீட்டுக்கு வருவது தவறு என்றும் சொல்லித் திருப்பி அனுப்பினார். தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு திரும்பிய உஷாதேவி வெப்பத்தை தாங்க முடியாமல் தவித்தாள். சூரியனிடமிருந்து ஒதுங்கிச் செல்ல முடிவு செய்த அவள், அங்கிருந்து வெளியேறினாலும், தான் இல்லாதது கணவருக்கோ, குழந்தைகளுக்கோத் தெரியக் கூடாது என நினைத்தாள். தன் நிழலில் இருந்து தன் அழகுக்குச் சமமான பெண்ணாக உருவாக்கினாள். அவள் உஷாதேவியைப் போலவே இருந்தாள். சாயாதேவியிடம் உஷாதேவி, “சகோதரி, என் கணவரின் வெப்ப அளவைக் குறைப்பதற்காக தவமிருக்கச் செல்கிறேன். என் கணவருக்கோ, குழந்தைகளுக்கோ நானில்லாத குறை தெரியாதபடி கவனித்துக் கொள்” என்றாள். அவளும் சம்மதித்தாள். அதன் பிறகு, உஷாதேவி குதிரை வடிவெடுத்து, தவத்தில் ஆழ்ந்தாள். சூரியனுடன் சேர்ந்து வாழத் தொடங்கினாள் சாயாதேவி. அவள் சூரியனுக்கோ, குழந்தைகளுக்கோ சந்தேகம் ஏற்படாதபடி நடந்தாள். உஷாதேவியின் குழந்தைகளைத் தன் குழந்தைகளாகவே கருதி வளர்த்தாள். இந்நிலையில் சாயாதேவிக்கு, ச்ருதச்ரவஸ், ச்ருதகர்மா என்ற மகன்களும், தபதீ எனும் பெண் குழந்தையும் பிறந்தனர். தனக்கு குழந்தைகள் பிறந்த பின்பு, உஷாதேவிக்குப் பிறந்த குழந்தைகளைப் புறக்கணித்தாள். அவளிடம் ஏற்பட்ட மாறுதலைக் கண்டு உஷாதேவியின் குழந்தைகள் மூவரும் வருந்தினர். உஷாதேவியின் இரண்டாவது மகன் எமன் அவளுடன் அடிக்கடி சண்டையிட்டான். ஒருநாள் கோபத்தில், அவளை உதைப்பது போல காலைத் துாக்கிக் காட்டினான். கோபமடைந்த சாயாதேவி, அந்த கால் அழுகி பூமியில் விழட்டும் என சபித்தாள். தாயிடம் சாபம் பெற்ற எமன், தன் தந்தையிடம் முறையிட்டான். அதனைக் கேட்ட சூரியன், அவள் கொடுத்த சாபத்தின்படி, எமனின் காலிலுள்ள இறைச்சியைப் புழுக்கள் எடுத்துக் கொண்டு, அவை அனைத்தும் பூமியில் விழுந்து இறக்கட்டும்” எனச் சொல்லி அந்தச் சாபத்தை மாற்றினார். பின்னர் சூரியன், “நம் குழந்தைகளில் முதல் மூவரை மட்டும் வெறுப்பது ஏன்?” என சாயாதேவியிடம் கோபித்தார். உண்மையை மறைக்க முடியாது என உணர்ந்த சாயாதேவி, நடந்ததைச் சொல்லி மன்னிப்பு கேட்டாள். அவளை மன்னித்த சூரியன், மூத்த மனைவி உஷாதேவியைத் தேடிச் சென்றார். குதிரை வடிவில் இருந்து மாறித் தன்னுடன் வரும்படி அழைத்தார். சூரியனுடன் வர மறுத்த அவள், “சுவாமி, தங்களின் உடலில் இருந்து வெளி வரும் வெப்பத்தை தாங்க முடியவில்லை. தங்களின் வெப்ப அளவைக் குறைக்கவே தவம் செய்கிறேன்” என்றாள். அப்போது அங்கு தோன்றிய சிவனின் வழிகாட்டுதலால் தேவதச்சன் விஸ்வகர்மாவின் உதவியுடன் வெப்பத்தின் அளவை சூரியன் குறைத்துக் கொண்டார். அதன் பிறகு இரு மனைவியருடன் நிம்மதியாக வாழத் தொடங்கினார் சூரியன். -திருமணம் தொடரும்தேனி மு.சுப்பிரமணி99407 85925