உள்ளூர் செய்திகள்

தெய்வத் திருமணம் - 1

சிவபெருமான் - தாட்சாயிணிமூன்று உலகங்களுக்கும் தலைவனாக விரும்பினான் பிரம்மாவின் மகன் தட்சன். அதற்காக கயிலை மலையில் சிவபெருமானின் அருளைப் பெறுவதற்காக தவமிருந்தான். அவனுடைய ஆயிரமாண்டு தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவன் உமாதேவியுடன் காட்சியளித்தார். ''சுவாமி... தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் அனைவரும் என் ஆணைப்படி நடக்க வேண்டும், எனக்கு குழந்தை வேண்டும், அதுவும் தங்களின் துணைவியான உமாதேவி என் மகளாகப் பிறக்க வேண்டும்” என வரம் கேட்க அதை சிவபெருமான் வழங்கினார். அதன் பிறகு தட்சனுக்கும், வேதவல்லிக்கும் திருமணம் நடந்தது. அவர்களின் இல்லற வாழ்வின் பயனாக இருபத்தேழு பெண் குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் அனைவரும் சந்திரனை மணந்தனர். சிவபெருமான் அளித்த வரத்தின்படி தனக்கு உமாதேவி மகளாகப் பிறக்கவில்லையே என்ற கவலை அவனுக்கு இருந்தது. இந்நிலையில் உமாதேவி பூமிக்கு வந்தாள். காளிந்தி நதியில் வலம்புரிச் சங்காக மாறிச் சிவபெருமானை நினைத்துத் தவம் செய்தாள். மாசி மாத மகம் நட்சத்திர நாளில் அங்கு வந்த தட்சன், அந்த நதியில் கிடந்த அழகிய வலம்புரிச் சங்கைக் கையில் எடுத்தான். அந்த வலம்புரிச் சங்கில் தோன்றினாள் உமாதேவி. அந்தக் குழந்தைக்குத் தாட்சாயிணி எனப் பெயரிட்டு வளர்க்கத் தொடங்கினான். சிவபெருமானின் நினைவுகளுடனே வளர்ந்த அந்தக் குழந்தை இளம் பருவத்தை அடைந்தது. அவளுக்குச் சிவபெருமானை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. தன் விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்த தாட்சாயிணி, அதற்காக தவமிருக்கப் போவதாகச் சொன்னாள். சிவபெருமான் தன் மகளைத் திருமணம் செய்தால் தனக்கு புகழும், அதிகாரமும் சேரும் என நினைத்த தட்சன், தவத்திற்குத் தேவையான வசதிகளை மகளுக்குச் செய்து கொடுத்தான்.தாட்சாயிணியின் தவம் ஆறு ஆண்டு தொடர்ந்தது. ஒருநாள் ஒரு இளைஞனைப் போல வந்து அவளைத் திருமணம் செய்ய விரும்புவதாகச் சொன்னார் சிவபெருமான். “நான் சிவபெருமானைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய மாட்டேன்” என்றாள். “சிவபெருமான் உன்னை எப்படி திருமணம் செய்வார்” எனக் கேட்டான் அந்த இளைஞன். கோபமடைந்த அவள், “சிவபெருமான் என்னை ஏற்கும் வரை தவத்தைத் தொடர்வேன். விருப்பம் நிறைவேறாமல் இறந்தாலும், மீண்டும் பூமியில் பிறந்து அவரை எப்படியும் திருமணம் செய்வேன்” எனச் சொன்னாள். அதைக் கேட்டு மகிழ்ந்த சிவபெருமான் அவளுக்குத் தன் உண்மையான தோற்றத்தைக் காட்டினார். “தாட்சாயிணி, உன்னை மணக்க விரைவில் வருகிறேன்” எனச் சொல்லி விட்டு மறைந்தார். இதனையறிந்த தட்சன் தன் மகளின் திருமணத்திற்கு நாள் குறித்து அனைவரையும் வரவழைத்தான். அந்த நாளில் தாட்சாயிணியை திருமணம் செய்ய சிவபெருமானும் வந்தார். திருமணத்திற்கான சடங்குகள் நடந்தன. இந்நிலையில் சிவபெருமான் அங்கிருந்து மறைந்தார். கோபமடைந்த தட்சன், “இந்தத் திருமணத்தில் என்ன குறையைக் கண்டார் சிவன்?” என இகழ்ந்தான். எதுவும் சொல்ல முடியாமல் தவித்த தாட்சாயிணி மீண்டும் தவம் செய்ய புறப்பட்டாள். ஒருநாள் காளை வாகனத்தில் காட்சியளித்த சிவபெருமான், தவத்தில் இருந்த தாட்சாயிணியை அழைத்துக் கொண்டு கயிலை மலைக்கு சென்றார். இதனைக் கேள்விப்பட்ட தட்சன், “பித்தனான சிவன் அவமானப்படுத்தி விட்டான். முறைப்படி என் மகளை அவனுக்குத் திருமணம் செய்து வைக்க நினைத்த போது, முகூர்த்த நேரத்தில் மறைந்தான். இப்போதோ என் மகளையே கடத்திக் கொண்டு போய்விட்டான்” என பழித்தான். கோபத்தை கைவிட்டு, சிவபெருமானை சந்தித்தால் எல்லாம் சரியாகி விடும் என தேவர்கள் சமாதானம் செய்தனர். அதைக் கேட்டு தட்சனும் கைலாயத்திற்குச் சென்றான். அங்கு காவலில் இருந்த சிவகணங்கள் அவனை உள்ளே விடவில்லை. தன்னை மதிக்கத் தவறிய சிவபெருமானை அவமதிக்க முடிவு செய்தான். மூன்று உலகங்களிலும் சிவபெருமானை யாரும் வணங்கக் கூடாது என ஆணையிட்டான். மீறியவர்களை தண்டித்தான். சிவபெருமானுக்கு அழைப்பு விடுக்காமல் ஒரு வேள்வியை செய்யத் தொடங்கினான். தாட்சாயிணி அதில் கலந்து கொள்ள விரும்பினாள். அழைப்பின்றி சென்றால் அவமானப்பட நேரிடும் என சிவபெருமான் தடுத்தும் அவள் கேட்காமல் புறப்பட்டாள். தந்தையான தட்சனிடம் வாக்குவாதம் செய்தாள். ஆனால் பயனில்லை. கணவரின் சொல்லைக் கேட்காத பெண் சிரமப்படுவாள் என்பதை உணர்ந்து வருந்தினாள். அங்கிருந்த வேள்வித் தீயில் விழுந்து சாம்பலானாள். இதன் பின் மூன்று உலகிற்கும் தலைவனான தட்சனைக் கொன்றார் சிவபெருமான். -திருமணம் தொடரும்தேனி மு.சுப்பிரமணி99407 85925