உள்ளூர் செய்திகள்

கோயிலும் பிரசாதமும் - 24

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் - வங்கார தோசைநவதிருப்பதி தலங்களில் ஒன்றாகவும், நுாற்றியெட்டு திவ்யதேசங்களில் ஒன்றாகவும் உள்ள ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலின் பிரசாதம் வங்கார தோசை. துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இக்கோயிலைச் சுற்றிலும் 20 கி.மீ., சுற்றளவில் நவதிருப்பதிகள் எனப்படும் ஒன்பது கோயில்கள் உள்ளன. ஆழ்வார்திருநகரி மூலவர் ஆதிநாதருக்கு தினமும் காலையில் ஆறு வங்கார தோசை நைவேத்யம் செய்யப்படுகிறது. இது மட்டுமின்றி தென்திருப்பேரை கோயிலிலும் இந்த பிரசாதம் முக்கிய உற்ஸவங்களின் போது இடம் பெறுகிறது.மகாவிஷ்ணுவிடம் வரம் பெறுவதற்காக பூமியில் தவம் செய்ய விரும்பினார் பிரம்மா. அதற்கு ஏற்ற இடத்தை தனக்கு காட்டும்படி மகாவிஷ்ணுவிடம் கேட்க, “நான்முகனாகிய உன்னை படைக்கும் முன்பே தாமிரபரணி ஆற்றங்கரையில் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளியுள்ளோம். அந்த இடமே தவம் செய்ய ஏற்ற இடம்'' என்றார். தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஆழ்வார்திருநகரியில் பிரம்மாவும் தவமிருக்கத் தொடங்கினார். அதைக் கண்டு இரங்கிய மகாவிஷ்ணு காட்சியளித்து தாமே குருவாக இருந்து படைப்பு தொழிலுக்குரிய வேத மந்திரங்களை உபதேசித்தார். நான்முகன் இங்கு தவம் செய்யும் முன்பே சுயம்புமூர்த்தியாக பெருமாள் இங்கு இருப்பதால் 'ஆதிநாதர்' எனப் பெயர் பெற்றார். குருநாதராக இருந்து உபதேசம் செய்ததால் இத்தலம் 'திருகுருகூர்' எனப்பட்டது. தாமிரபரணியின் தென்கரையில் இக்கோயில் உள்ளது. ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் கிழக்கு நோக்கியபடி நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஆதிநாதர் இருக்கிறார். ஆதிநாச்சியார், திருக்குருகூர் வல்லி என இரண்டு தாயார் சன்னதிகள் உள்ளன. உற்ஸவரின் திருநாமம் பொலிந்து நின்ற பிரான். வராகர் தன் மடியில் பூமாதேவியை தாங்கியபடி ஞானப்பிரான் என்னும் பெயருடன் சேவை சாதிக்கிறார். லட்சுமி நரசிம்மர், திருவேங்கடமுடையான், வேணுகோபாலன், ராமர், ஆஞ்சநேயர், தசாவதாரம், ஆழ்வார்கள், மணவாள மாமுனிகள், ராமானுஜர் சன்னதிகள் உள்ளன. நம்மாழ்வாரின் அவதார தலம் இது. ஆதிசேஷனின் அவதாரமான இவர் தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். இவருக்கு மாசி, வைகாசியில் கொடியேற்றமாகி திருவிழா நடக்கும். ஆழ்வார் பெயராலேயே அழைக்கப்படும் அபூர்வத்தலம் இது. 16 ஆண்டுகள் பேசாத குழந்தையாக ஒரு புளிய மரத்தின் பொந்தில் நம்மாழ்வார் இருந்தார். இந்த மரத்தின் கீழ் நம்மாழ்வார் சன்னதி உள்ளது. புளிய மரத்திற்கும் தினமும் பூஜை நடக்கிறது. இங்கு பெருமாள், ஆழ்வாருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. தலவிருட்சம் உறங்காப்புளி எனப்படும் புளியமரம். இந்த மரம் பூக்கும், காய்க்கும் ஆனால் பழுக்காது. இதன் இலைகள் இரவில் உறங்காது. எனவே தான் உறங்காப்புளி எனப்படுகிறது. பிரம்ம தீர்த்தம், தாமிரபரணி இத்தலத்தின் தீர்த்தங்கள். கோயிலின் மதில்சுவர் மீது வடகிழக்கு மூலையில் உள்ள கருடாழ்வார் பிரசித்தமானவர். கருடாழ்வாருக்கு ஆடி சுவாதி அன்று அமிர்தகலசம் என்னும் பிரசாதம் நைவேத்யம் செய்யப்படும். பெருமாளுக்கு பங்குனி, சித்திரையில் திருவிழாவும், ஆழ்வாருக்கு மாசி, வைகாசியில் திருவிழாவும் நடக்கிறது. வைகுண்ட ஏகாதசி, அரையர் சேவை, கருட சேவை, சித்ரா பவுர்ணமி, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, ஊஞ்சல் உற்ஸவம் கொண்டாடப்படுகின்றன காலை 6:00 - 12:00 மணி மாலை 4:30 - 8:00 மணி வரை திறந்திருக்கும். திருநெல்வேலி, திருச்செந்துாருக்கு இடையில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில் கோயில் உள்ளது. வங்கார தோசை செய்யத் தேவையான பொருட்கள்பச்சரிசி - 2 கப் முழு கருப்பு உளுந்து - 1 கப் சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்மிளகு - 1 டேபிள் ஸ்பூன்சுக்குப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்வெல்லம் - 100 கிராம்நெய் - தேவையான அளவுகல் உப்பு - தேவையான அளவுசெய்முறைபச்சரிசி, கருப்பு உளுந்தை ஒன்றாக சேர்த்துக் களைந்து நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் இரண்டையும் நன்கு அரைத்து கொள்ள வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஆறு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.சீரகம், மிளகை தனித்தனியே கடாயில் வறுத்து பின்னர் பொடித்து வைத்துக் கொள்ளவும். சீரகப்பொடி, மிளகுப்பொடி, சுக்குப் பொடி, சிறிதளவு கல் உப்பை புளித்த தோசை மாவில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வெல்லத்தைப் பொடித்து தண்ணீரில் இட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி வைக்கவும். தயாராக உள்ள தோசை மாவை எடுத்து தடிமனாக ஊற்றி அதன் மீது தேவையான அளவு நெய்யை ஊற்றி வார்க்க வேண்டும். தோசை பதமாக வெந்து சிவந்ததும் எடுத்து ஒரு தட்டில் வைத்து அதன் மீது வெல்லக் கரைசலை சிறிதளவு ஊற்றித் தேய்க்க வேண்டும். வெல்லக் கரைசல் வங்கார தோசைக்குள் இறங்கி கூடுதல் சுவையைக் கொடுக்கும். ஆழ்வார்திருநகரி ஆதிநாதப் பெருமாளுக்கு உகந்த வங்கார தோசை தயாராகி விட்டது.-பிரசாதம் தொடரும்ஆர்.வி.பதி